/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை பதுங்கும் பகுதியில் புதர்செடிகளை அகற்றணும்!
/
சிறுத்தை பதுங்கும் பகுதியில் புதர்செடிகளை அகற்றணும்!
சிறுத்தை பதுங்கும் பகுதியில் புதர்செடிகளை அகற்றணும்!
சிறுத்தை பதுங்கும் பகுதியில் புதர்செடிகளை அகற்றணும்!
ADDED : ஜூன் 29, 2025 11:12 PM
வால்பாறை; வால்பாறையில், சிறுத்தை பதுங்கும் பகுதியில் உள்ள புதர் செடிகளை அகற்ற வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
சமீப காலமாக, தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் அதிகளவில் நடமாடுகின்றன. பகல் நேரத்திலேயே தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைகள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், கோழி, பூனை போன்றவைகளை கவ்வி சென்று உட்கொள்கின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் பச்சமலை எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை சிறுத்தை கவ்வி சென்று, கொடூரமான முறையில் கடித்து கொன்றது. கடந்த ஒன்பது மாதத்தில் இரண்டு குழந்தைகள் சிறுத்தையின் பசிக்கு இரையாகியுள்ளனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில் சமீப காலமாக சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்திலேயே உலாவுகின்றன. இதனால், குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
'எனவே, அனைத்து எஸ்டேட்களிலும், தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள புதர் செடிகளை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் வெட்டி அகற்ற வேண்டும். குடியிருப்பை சுற்றிலும், வனவிலங்குகள் நுழையாதவாறு தடுப்பு சுவர் கட்ட வேண்டும்,' என்றனர்.