மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி பெறுவோம்! அம்மன் அர்ஜுனன் உறுதி
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி பெறுவோம்! அம்மன் அர்ஜுனன் உறுதி
ADDED : ஏப் 16, 2026 11:20 PM

கோவை: கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், காட்டூர் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க சிறப்பு படை அமைக்கப்படும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் இலவச அரிசியோடு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1,200ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முழுமையான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தி.மு.க., அரசு அனுப்பவில்லை. தவறான அறிக்கையை அனுப்பி விட்டு, மத்திய அரசு மீது தி.மு.க. பழிபோடுகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஓராண்டுக்குள் அனுமதி பெற்று, செயல்படுத்துவோம்.
மாநகராட்சி பகுதியில் மழை நீர் வடிகால் சரியாக கட்டவில்லை. பாதாள சாக்கடையை உயர்த்திக் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மேற்குப்புறவழிச்சாலையை யார் கொண்டு வந்தது என்பது மக்களுக்குத் தெரியும். எப்போது பார்த்தாலும் பூதம் வருகிறது என்பது போல் ஹிந்தி வருகிறது என பிரச்னை செய்கின்றனர். இன்று ஹிந்தி தெரியாமல் எத்தனை மக்கள் உள்ளனர். ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகள் அதிகமாக தி.மு.க. குடும்பத்தினரிடம் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
