/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம்! கழிவுநீர் பிரச்னைக்கு கடும் எதிர்ப்பு
/
நகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம்! கழிவுநீர் பிரச்னைக்கு கடும் எதிர்ப்பு
நகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம்! கழிவுநீர் பிரச்னைக்கு கடும் எதிர்ப்பு
நகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம்! கழிவுநீர் பிரச்னைக்கு கடும் எதிர்ப்பு
ADDED : பிப் 16, 2024 12:13 AM
பொள்ளாச்சி:'பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தில் இருந்து நேரடியாக கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், நடப்பாண்டு நகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம்,' என, அப்பகுதி வணிக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் பயணியர் வசதிக்காக, கட்டண கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, இந்த கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மனித கழிவு நீர், நேரடியாக திறந்தவெளியில் வழிந்தோடுகிறது.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தனியார் வணிகக் கட்டடம் வழியாக வெளியேறும் கழிவு நீர், ராஜாமில் ரோட்டை சென்றடைகிறது. இதனால், ரோட்டில் செல்லும் மக்கள் மூக்கை பிடித்தவாறு, ஓட்டம் பிடிக்கின்றனர்.
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் மவுனம் சாதிப்பதாக அப்பகுதி கடைக்காரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், நடப்பாண்டு, நகராட்சிக்கு சொத்து மற்றும் குடிநீர் வரி செலுத்த மாட்டோம் என, வணிக நிறுவனத்தினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடைக்காரர்கள் கூறியதாவது: பல மாதங்களாக, கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர் நேரடியாக திறந்தவெளியில் வழிந்தோடுகிறது. நகராட்சி சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் அலட்சியம் காட்டுகின்றனர். சப்-கலெக்டர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.