/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியணும்! போலீசார் அறிவுரை
/
பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியணும்! போலீசார் அறிவுரை
பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியணும்! போலீசார் அறிவுரை
பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியணும்! போலீசார் அறிவுரை
ADDED : பிப் 07, 2025 08:43 PM
கிணத்துக்கடவு; பொள்ளாச்சி --- கோவை ரோட்டில் செல்லும் பைக் ஓட்டுநர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும், என, போலீசார் அறிவுறுத்தினர்.
பொள்ளாச்சி -- கோவை ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பின், ஆண்டுக்கு, 50 முதல் 70 விபத்துகள் வரை நடக்கிறது. இதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில், பைக் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணியாமல் அதிவேகத்தில் செல்வதாலும், 'யு டர்ன்' மற்றும் சர்வீஸ் ரோடு போன்ற இடங்களில் செல்லும் போது வேகத்தை குறைக்காமல் செல்வதாலும், கவனக்குறைவாக இருப்பதாலும் விபத்து நடக்கிறது. விபத்தில் அதிகப்படியாக சிக்குபவர்கள் இளைஞர்களே என்கின்றனர் போலீசார்.
உடன் படிக்கும் மற்றும் வேலைக்கு செல்பவர்களை பைக்கில் அழைத்து செல்லும் போது, ஒருவர் மட்டும் ஹெல்மெட் அணிந்து செல்வது, ஓட்டுநர் ஹெல்மெட் அணியாமல் பின் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது என போக்குவரத்து விதியை மீறுவதால், அதிக விபத்து நடக்கிறது.
எனவே, இனி வரும் நாட்களில், அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பைக்கில் இருவர் சென்றாலும், கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பைக்கில் பயணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். ஹெல்மெட் இருந்தாலும், அதை அணியாமல் பைக்கில் காட்சிப்பொருளாக வைத்து செல்கின்றனர்.
இவர்கள், குடும்பத்தை நினைவில் வைத்துக்கொண்டு கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல, முன் கூட்டியே கிளம்பி மெதுவாக பயணிக்க வேண்டும்.
'உங்கள் உயிர் உங்கள் கையில்; உங்கள் குடும்பம் உங்களை நம்பி உள்ளது,' என்பதை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால், அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.