/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் எடை தாங்கும் பரிசோதனை
/
மேம்பாலத்தில் எடை தாங்கும் பரிசோதனை
ADDED : பிப் 16, 2024 11:29 PM

பெ.நா.பாளையம்:கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் வண்ணான் கோவில் பிரிவு வரை, 1.8 கி.மீ., துார மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை துறையின் ஆண்டு நிதி திட்டத்தில்,115 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த டிச., மாதம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.
தற்போது, பாலத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வருகின்றன. பாலத்தின் எடை தாங்கும் திறன் பரிசோதனை தற்போது நடந்து வருகிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தலா, 25 டன் எடையுடன் கூடிய நான்கு டாரஸ் லாரிகள், மேம்பாலத்தின் மேல் பகுதியில் தொடர்ந்து, 48 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்படும். பின்னர், 24 மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு டாரஸ் லாரியாக அகற்றப்படும். அப்போது பாலத்தின் எடை தாங்கும் திறனில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பது குறித்து துல்லியமாக ஆய்வு நடத்துவோம்.
இதே போல மீண்டும் டாரஸ் லாரிகள் நிறுத்தப்பட்டு, 24 மணி நேர இடைவெளியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேம்பாலம் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, இது போன்ற எடை தாங்கும் திறன் ஆய்வுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சோதனையை திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது' என்றனர்.
ஆய்வின் முடிவில், வெளியிடப்படும் அறிக்கையில் மேம்பாலத்தின் எடை தாங்கும் திறன் குறித்த தகவல் வெளியாகும்.