/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதியோகி சிவன் ரதத்திற்கு வரவேற்பு
/
ஆதியோகி சிவன் ரதத்திற்கு வரவேற்பு
ADDED : பிப் 20, 2025 11:38 PM

அன்னுார்; ஆதியோகி சிவன் ரதத்திற்கு கோவை மாவட்ட எல்லையில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு நிறுவிய ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா வருகிற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், சென்னை, கூடுவாஞ்சேரியில் கடந்த ஜன. 26ம் தேதி, 63 நாயன்மார்கள் வீற்றிருக்கும் ரதமும், ஆதியோகி சிவன் வீற்றிருக்கும் ரதமும் புறப்பட்டன. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக, நேற்று மதியம் கோவை மாவட்ட எல்லைக்கு ரதங்கள் வந்தன. ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர். பக்தர்கள், பொதுமக்கள், ரதங்களில் உள்ள ஆதியோகி சிவனையும், 63 நாயன்மார்களையும் வழிபட்டனர். ரதங்களுடன் 45 சிவாங்கர்கள் பாதயாத்திரையாக உடன் வந்தனர்.
யாத்திரை குறித்து சிவாங்கர்கள் கூறுகையில், 'கடந்த 25 நாட்களில் 600 கி.மீ., தூரம் பயணித்துள்ளோம். இதுவரை 650 ஊர்கள் வழியாக யாத்திரை நடைபெற்றுள்ளது. பல லட்சம் மக்களுக்கு ஆதியோகி சிவன் குறித்தும் சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். வருகிற 24ம் தேதி ஈஷா யோகா மையத்தை அடைய உள்ளோம்,' என்றனர்.

