/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குத்தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
/
மேற்குத்தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
மேற்குத்தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
மேற்குத்தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
ADDED : செப் 22, 2024 07:25 AM
கோவை: 'கோவை பேரூர் அருகே மலை அடிவார கிராமங்களில் செம்மண் கடத்தலை தடுத்து நிறுத்தாவிட்டால், மேற்குத்தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும். சட்ட விரோதமாக மண் கடத்துவோரை கைது செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி கடத்தப்படுகிறது. நமது நாளிதழில், கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிடப்பட்டது.
கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, மண் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுத்தனர். சில மாதங்கள் மண் கடத்துவதை நிறுத்தியிருந்தனர்.
தற்போது, மங்களபாளையம், மூங்கில் மடை குட்டை, மூலக்காடு, வெள்ளிமலைப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களில், மீண்டும் கிராவல் மண் மற்றும் செம்மண் வெட்டி எடுத்து, டிப்பர் லாரிகளில் கடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, செப்., 5ல் நமது நாளிதழில், படங்களுடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. உடனே, கோவை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து, 'கணக்கு' காட்டுவதற்காக, அபராதம் விதித்தனர். செம்மண் கடத்துவோர் மீது கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இச்சூழலில் சிவா என்பவர், செம்மண் கடத்தலை தடுக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது சார்பாக ஆஜரான வக்கீல் புருசோத்தமன், செம்மண் கடத்துவது தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன், ஐகோர்ட் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் ஏற்கனவே முறையிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, கோவை கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செம்மண் வெட்டி எடுக்கப்படுவதை, மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலமாக, மனுதாரர் சிவா காண்பித்தார்.
அதை வக்கீல் புருசோத்தமன், நீதிபதிகளிடம் நேரடியாக காட்டினார். உடனே, கோவை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் சார்பில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையை படித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'சட்ட விரோதமாக செம்மண் வெட்டி எடுத்தவர்களுக்கு அபராதம் விதித்திருப்பதாக, கூறியிருப்பது கண்துடைப்பு. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டு இருப்பது, வீடியோ மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
இதை அனுமதித்தால், மேற்குத்தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும்; நிலச்சரிவு அபாயம் ஏற்படும். செம்மண் எடுக்கப்படுவதால் உருவாகும் குழிகளில், யானை மற்றும் விலங்குகள் விழும் அபாயம் உள்ளது.
இப்பகுதிகளில் மண் எடுக்கும் பணியை, தடுத்து நிறுத்த வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
'கோவை மாவட்டத்தில் மலை அடிவார கிராமங்களில், கலெக்டர், எஸ்.பி., மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர், ஆய்வு செய்ய வேண்டும். மண் திருடுவோரை கைது செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
கோவை கலெக்டர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, அவகாசம் கோரப்பட்டது. அதனால், இவ்வழக்கு, 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.