/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எஸ்.டி.,யால் ஆட்டம் காணும் வெட் கிரைண்டர் உற்பத்தி
/
ஜி.எஸ்.டி.,யால் ஆட்டம் காணும் வெட் கிரைண்டர் உற்பத்தி
ஜி.எஸ்.டி.,யால் ஆட்டம் காணும் வெட் கிரைண்டர் உற்பத்தி
ஜி.எஸ்.டி.,யால் ஆட்டம் காணும் வெட் கிரைண்டர் உற்பத்தி
ADDED : செப் 30, 2025 10:28 PM

வெ ட் கிரைண்டர் உற்பத்திக்கு புகழ் பெற்ற கோவை, ஜி.எஸ்.டி., மற்றும் மின்சார நிலைக்கட்டண உயர்வு போன்றவற்றால் பெரும் தள்ளாட்டத்தில் உள்ளது. சமீபத்திய ஜி.எஸ்.டி,சீரமைப்பில் வெட்கிரைண்டருக்கு வரிக்குறைப்பு அறிவிக்கப்படாதது தொழில்துறையினரை ஏமாற்றமடையச் செய்துள்ளது. கிரைண்டர் தொழிலை வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப, ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தில், நிறைய பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்ததற்கு நன்றி. அதேசமயம் நீண்டகாலமாக வெட்கிரைண்டருக்கு ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். நிதியமைச்சர் இதுவரை செவிசாய்க்கவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் எல்லாமே 5 சதவீதத்தில் வருகிறது என, மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். வெட் கிரைண்டர்கள், பெண்களுக்கு சமையலறையில் மிக அத்தியாவசியமான பொருள். எனவே, வெட்கிரைண்டருக்கான ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
மாநில அரசும் மின் கட்டணத்தில் நிலைக்கட்டணத்தை முன்பிருந்த அதே அளவுக்குக் குறைக்க வேண்டும். வெட் கிரைண்டர் கோவையின் அடையாளமாகத் திகழ்கிறது. வெட் கிரைண்டருக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
வாட் முறை அமலில் இருந்தபோது, கிரைண்டருக்கு 5 சதவீத வரிதான் விதிக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டபோது, 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், கிரைண்டர் விற்பனை பாதிக்கப்பட்டது.
தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து மத்திய அரசு 2019ல் 5 சதவீதமாகக் குறைத்தது. இதனால் கிரைண்டர் உற்பத்தி மீட்சி பெற்றது. மீண்டும் 2022 ஜூலையில் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதனால், விலை அதிகரித்து, பொதுமக்கள் வாங்கத் தயங்குகின்றனர். இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்குப் பதில், ரெடிமேடு மாவு வாங்கிக் கொள்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவையில் எங்கு பார்த்தாலும், வெட் கிரைண்டர் உற்பத்தித் தொழில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் இத்தொழிலால் வாழ்வாதாரம் பெற்று வந்தனர்.
தற்போது ஆயிரம் குடும்பங்கள் கூட, இத்தொழிலை நம்பியில்லை.
கிரைண்டர் உற்பத்தி என்பது குடிசைத் தொழில் போல. இதில் மிகப்பெரிய லாபம் ஏதுமில்லை. ஜி.எஸ்.டி.,யை குறைப்பதால், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.