/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
90வது வார்டு ரோட்டுல என்னங்க இவ்வளவு குழி!
/
90வது வார்டு ரோட்டுல என்னங்க இவ்வளவு குழி!
ADDED : ஜன 15, 2024 11:02 PM

அதிகரிக்கும் விபத்துகள்
ரத்தினபுரி, சாதிக்பாட்சா வீதியில் குடிநீர் குழாய் பதிப்புக்காக சாலையில் பெரிய குழி தோண்டப்பட்டது. குழியை சரிவர மூடவில்லை. இதனால், இப்பகுதியில் அதிக விபத்துகள் நடக்கிறது. குழியை மூடி, தார் ஊற்ற வேண்டும்.
- வெள்ளியங்கிரி, ரத்தினபுரி.
குழியால் தடுமாறும் வாகனங்கள்
திருச்சி ரோடு, சிந்தாமணிப்புதுார், ஏ.கே.ஏ., திருமண மண்டபம் மு சாலையில் பெரியகுழி உள்ளது. பைக்கில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். உயிரிழப்புகள் நிகழும் முன் குழியை மூட வேண்டும்.
- நந்தகோபால், சிந்தாமணிப்புதுார்.
டெங்கு நோய்இங்கு இலவசம்
வெள்ளக்கிணறு, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதி இரண்டு அருகே, சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசு புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்வோர் மீது தண்ணீர் தெறிக்கிறது.
- மணிமாறன், வெள்ளக்கிணறு.
மின் இணைப்பின்றி விளக்குகள்
கோவை மாநகராட்சி, 51வது வார்டு, ராஜீவ்காந்தி நகரில், சாலைப்பணியின் போது சுமார், 25 கம்பங்களின் தெருவிளக்குகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பணிகள் முடிந்த பின்பும் தெருவிளக்குகளுக்கு, மின் இணைப்பு கொடுக்கவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சேகர் பாபு, ராஜீவ் காந்தி நகர்.
சாலை முழுவதும் குழிகள்
கோவைப்புதுார், 90வது வார்டு, வ.உ.சி., நகர், முதல் வீதியில், சாலை முழுவதும் குழிகளாக காணப்படுகிறது. மழை பெய்யும் போது குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- ஆனந்தன், கோவைப்புதுார்.
இருளால் பாதுகாப்பில்லை
இடையர்பாளையம், பூம்புகார் நகர், வைரவர் வீதியில், ' எஸ்.பி-31 பி- 7' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த ஆறு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள், முதியவர்களுக்கு பாதுகாப்பில்லை.
- வள்ளி, இடையர்பாளையம்.
கடும் துர்நாற்றம்
சுந்தராபுரம், குறிச்சி, 85வது வார்டில் சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரவில்லை. கால்வாயில் குப்பை அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசு உற்பத்தி அதிகளவில் இருப்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சங்கர், குறிச்சி.
தெருவிளக்கு பழுது
சேரன்மாநகர், அப்பாச்சி கார்டன், ஒன்பதாவது வார்டு, 'எஸ்.பி -28, பி -15' என்ற எண் கொண்ட கம்பத்தில், ஒரு மாதமாக எரியவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் விளக்கு பழுதை சரிசெய்யவில்லை.
- நிர்மலா, சேரன்மாநகர்.
சேற்றில் மாட்டும் வாகனங்கள்
தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் சாலை, குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும் சாலையை சீரமைக்கவில்லை. மண்ணாக இருக்கும் சாலை, மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. வாகனங்களின் சக்கரங்கள் மாட்டி, வெகுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- மனோகரன், ஜி.என்.மில்ஸ்.
பலி கேட்கும் குழி
கோவை சர்க்யூட் ஹவுஸ் ரோட்டில், சாலை நடுவே உள்ள பெரிய குழி, நீண்ட நாட்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில், இப்பகுதியில் அதிக விபத்து நடக்கிறது. உயிரிழப்புகள் நிகழும் முன், குழியை சரிசெய்ய வேண்டும்.
- யுவராஜ், திருமகள் நகர்.