/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டார 'வாட்ஸ்ஆப்' குழுக்கள் என்ன ஆச்சு?
/
வட்டார 'வாட்ஸ்ஆப்' குழுக்கள் என்ன ஆச்சு?
ADDED : ஏப் 14, 2025 07:04 AM
கோவை : அரசு அறிவித்தபடி விவசாயிகளுக்கான வட்டார அளவிலான வாட்ஸ்ஆப் குழுக்களை அமைத்து, முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்குத் தேவையான சந்தை நிலவரம், தொழில்நுட்பம், மானிய அறிவிப்புகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற தகவல்களை விவசாயிகளுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்க்க, வட்டார அளவில் விவசாயிகளை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழுக்கள் உருவாக்கப்படும்.
இதன் ஒருங்கிணைப்பாளராக, வட்டார வேளாண் உதவி இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோர் செயல்படுவர்.
வட்டார குழுக்களை ஒருங்கிணைத்து, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் குழுக்கள் உருவாக்கப்படும் என, கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.
பெரும்பாலான வட்டாரங்களில் இந்த வாட்ஸப்குழுக்கள் உருவாக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பல வட்டாரங்களில் இக்குழுக்கள் உருவாக்கப்படவே இல்லை. அப்படி உருவாக்கி இருந்தாலும், செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
இக்குழுக்களை உருவாக்க அரசுக்கு செலவு ஏதுமில்லை. அதேசமயம் விவசாயிகளுக்கு பயன் அதிகம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.