/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் என்ன செய்யலாம்? முன்மொழிவு அனுப்ப அதிகாரிகள் ஆய்வு
/
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் என்ன செய்யலாம்? முன்மொழிவு அனுப்ப அதிகாரிகள் ஆய்வு
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் என்ன செய்யலாம்? முன்மொழிவு அனுப்ப அதிகாரிகள் ஆய்வு
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் என்ன செய்யலாம்? முன்மொழிவு அனுப்ப அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 23, 2024 11:21 PM
கோவை: வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட்டின் தற்போதைய நிலையை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். புதர்மண்டியுள்ள பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுத்தம் செய்ய, பொறியியல் பிரிவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம் துவக்கப்பட்டது; மாநகராட்சி பொது நிதியில் கட்டுமான பணி வேக வேகமாக நடந்தது; 37 சதவீத பணிகள் நடந்திருக்கின்றன. 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
மூன்றரை ஆண்டுகளாக எவ்வித பயன்பாடின்றி, அங்குள்ள கட்டுமானம் வீணாகி வருகிறது. வளாகத்தை சுற்றிலும் புதர்மண்டியிருக்கிறது. கோவை மக்களின் வரிப்பணத்தில் ரூ.52.46 கோடி செலவாகியிருக்கிறது. அதனால், அரசியல் காழ்ப்புணர்வு பார்க்காமல் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த, தெற்குப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
கள ஆய்வில் முதல்வர்
இம்மாத துவக்கத்தில், 'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தில், கோவையில் இரு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் முகாமிட்டார். அவரது கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், நமது நாளிதழில் கோவையின் முக்கியப் பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காண, அரசு உயரதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.
மத்திய சிறையை பிளீச்சிக்கு இட மாற்றம் செய்ய நிதி ஒதுக்கிய அரசாணை உடனடியாக வெளியிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கோரிய இரு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான 'டிசைன்', தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. ஆர்.எஸ்.புரத்தில் ஹாக்கி மைதானம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது; அப்போது, கிரிக்கெட் மைதானத்துக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டின் தற்போதைய நிலையை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். புதர்மண்டியிருக்கும் பகுதிகளை சுத்தம் செய்ய, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார். இதுவரை செலவழித்த தொகை எவ்வளவு, என்னென்ன பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன என அதிகாரிகளிடம் கமிஷனர் கேட்டறிந்தார்.
அரசு முடிவே இறுதியானது
முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்கிற விவாதம் வந்தது. மாநகராட்சியில் இருந்து தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்ப இருக்கிறோம். அரசின் முடிவே இறுதியானது. பஸ் ஸ்டாண்ட்டின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய ஆய்வு செய்தோம். எப்படி பயன்படுத்துவது என அரசு கூறிய பின், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர்.