தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சியில் சுற்றுலா வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம்! அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

பொள்ளாச்சியில் சுற்றுலா வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம்! அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

பொள்ளாச்சியில் சுற்றுலா வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம்! அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை


ADDED : நவ 29, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில் அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் இணைந்து, சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்,' என, பொள்ளாச்சி சுற்றுலா வளர்ச்சி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் ேஹாட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பொள்ளாச்சியின் சுற்றுலா வளர்ச்சி சிறப்பு கூட்டம் தனியார் ரிசார்ட்டில் நடந்தது.

ேஹாட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் காமராஜ் வரவேற்று பேசுகையில், ''ேஹாட்டல்களில் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என முடிவு செய்துள்ளோம்.மேலும், தொழிற்சாலைகளை போன்று, ேஹாட்டல் தொழில்களுக்கும் அனைத்து விதமான சலுகைகள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணம் குறைக்க வேண்டும். பொள்ளாச்சியின் சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்,'' என்றார்.

தொழில்வர்த்தக சபை தலைவர் முத்துசாமி பேசுகையில், ''இயற்கை சுற்றுலா, பண்ணை மற்றும் தோட்ட சுற்றுலா, சாகசா சுற்றுலா என சுற்றுலாவை மேம்படுத்த முடியும். சென்னையில் உள்ளது போன்று, 'தக் ஷின் சித்ரா' என்ற கலாசார மையம் போன்று, கொங்கு கலாசாரத்தை பாதுகாக்க பொள்ளாச்சியில் மையம் துவங்க வேண்டும்.

பொள்ளாச்சியின் நீண்ட கால கோரிக்கையான சுற்றுலா அலுவலகம் அமைக்க வேண்டும். சுற்றுலா பயணியர் வசதிக்காக தங்கும் வசதிகள் உள்ளிட்ட தேவைகளை அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.

மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரி பேசியதாவது:

பொள்ளாச்சியில் சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், போதிய தகவல்கள் இல்லை. முதற்கட்டமாக பொள்ளாச்சியில், உள்ள ரிசார்ட்கள், பண்ணைகள் எத்தனை உள்ளன, ேஹாட்டல்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க வேண்டும். மூன்று பண்ணைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

அரசு, தனியார் பங்களிப்புடன் அடிப்படை வசதிகள்மேற்கொள்ள திட்டம் உள்ளது. இப்பகுதியின் அடையாளமாக இளநீர், கைத்தறி நெசவு புடவைகள் என பல இருந்தாலும், அவற்றை சுற்றுலா பயணியர் வாங்குவதற்கு வசதியாக அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வழிகாட்டிக்கான பயிற்சி, டிரைவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரசு வாயிலாக சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கேற்ப தனியார், தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பும் இருந்தால் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

நகராட்சி கமிஷனர் குமரன் பேசுகையில், ''பொள்ளாச்சி நகராட்சியில், ரவுண்டானாக்களை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. வால்பாறையிலும், சுற்றுலா பயணியருக்கு தேவையான வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுற்றுலா மேம்பட அனைத்து விதமான உதவிகளும் அளிக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் பேசுகையில், ''பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். பொள்ளாச்சியின் அடையாளங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான வழிவகை செய்ய வேண்டும். பொள்ளாச்சியில், சுற்றுலாவுக்கான 47 இடங்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி வசதிகள் செய்து கொடுத்து சுற்றுலா பயணியருக்கு உதவ வேண்டும்,'' என்றார்.

7 லட்சம் பேர் வருகை!

கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், இந்தாண்டு, 13 லட்சம் சுற்றுலா பயணியர் வந்ததாக கணக்குகள் உள்ளன. ஈஷா, மருத்துவம், யோகா இவற்றை சேர்க்காமல் மட்டும் இந்த தரவுகள் உள்ளன. பொள்ளாச்சியில், ஏழு லட்சம் சுற்றுலா பயணியர் வந்ததாக தரவுகள் கூறுகின்றன. பொள்ளாச்சி, வால்பாறையில் சுற்றுலா சார்ந்த தொழில்கள் நடக்கின்றன. சேவை செய்வோரை ஒருங்கிணைக்க கூட்டம் நடத்தப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. தேயிலை சுற்றுலா மேம்பாடு செய்ய நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். பழங்குடியின மக்கள் பொருளாதாரம் மேம்பட 'டிரக்கிங்' தொழிலுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. வால்பாறை சுற்றுலா திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



இ-பாஸ் நடைமுறை எதற்கு?

வால்பாறைக்கு செல்ல, இ-பாஸ் நடைமுறையில் எதிர்மறையான கண்ணோட்டம் தேவையில்லை. வால்பாறைக்கு எவ்வளவு பேர் வருகின்றனர் என்பதை கண்டறிந்து தரவுகளை சேகரிக்க இத்திட்டம், கோர்ட் உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எவ்வளவு வாகனங்கள் வருகின்றன, எத்தனை நாட்கள் தங்குகின்றனர். அதற்கேற்ப வசதிகள் உள்ளதா என்ற முழுமையான அறிக்கை தயார் செய்ய உதவுகிறது. இது ஒரு அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பாகும். திட்டங்களை தெளிவுப்படுத்தி முறைப்படுத்த உதவும், என, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us