ADDED : நவ 13, 2024 04:44 AM

கோவை,: கோவை - அவிநாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில், என்ன கலர் பெயின்ட் பூசலாம் என, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் (சிறப்பு திட்டங்கள்) மேம்பாலம் கட்டப்படுகிறது. 2025 ஜன., மாதத்துக்குள், இறங்கு தளம், ஏறு தளம் தவிர்த்து, மற்ற பணிகளை முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நவ இந்தியா, ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் இன்னும் ஓடுதளம் அமைக்க வேண்டியுள்ளது. கோல்டுவின்ஸ் பகுதியில், 'ரேம்ப்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், 'ஸ்டீல் டெக்' அமைக்கப்படுகிறது; இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடந்து வருகின்றன.
கோவையில் கட்டப்படும் மேம்பாலங்களுக்கு ஏதேனும் ஒரு வர்ணம் பூசப்படுகிறது. காந்திபுரம் மேம்பாலத்துக்கு பச்சை நிறம்; திருச்சி ரோடு மேம்பாலத்துக்கு நீலம் மற்றும் ஆரஞ்ச் நிறம்; உக்கடம் மேம்பாலத்துக்கு அடர் பச்சை நிற பெயின்ட் பூசப்பட்டது. இதேபோல், அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு என்ன கலர் பெயின்ட் பூசலாம் என்கிற ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, கொடிசியா அருகே உள்ள துாண்கள் சிலவற்றில் அடர் பச்சை, நீலம் மற்றும் பிஸ்கட் கலர் பெயிண்ட் பூசி பார்க்கப்பட்டிருக்கிறது. அவற்றை புகைப்படம் எடுத்து, சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் அனுப்பியுள்ளனர்.