/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜன்னலுக்கு மரம் தவிர்த்து வேறு என்னென்ன பயன்படுத்தலாம்?
/
ஜன்னலுக்கு மரம் தவிர்த்து வேறு என்னென்ன பயன்படுத்தலாம்?
ஜன்னலுக்கு மரம் தவிர்த்து வேறு என்னென்ன பயன்படுத்தலாம்?
ஜன்னலுக்கு மரம் தவிர்த்து வேறு என்னென்ன பயன்படுத்தலாம்?
ADDED : பிப் 09, 2024 11:53 PM

''ரெடிமிக்ஸ் கான்கிரீட் அமைக்கும் போது, சிறிய வெடிப்புகள் ஏற்படுவதால், அதன் வலிமையில் பாதிப்பு ஏற்படாது,'' என்கிறார் பொறியாளர் மணிகண்டன்.
கட்டுமான பணிமேற்கொள்ளும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) இணை பொருளாளர் மணிகண்டன்.
நாங்கள் தற்போது புதிதாக கட்டி வரும் வீட்டில், ரெடிமிக்ஸ் கான்கிரீட் அமைத்திருக்கிறோம். கான்கிரீட் அமைத்து முடித்த, இரண்டு மணி நேரத்தில் சிறிய வெடிப்புகளை பார்த்தேன். இது கான்கிரீட்டின் வலிமையை பாதிக்குமா?
- வெங்கடேசன், தடாகம்.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் அமைக்கும் போது, சிறிய வெடிப்புகள் வருவது சகஜம் தான். இது வலிமையை பாதிக்காது. வெயில் காலத்தில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் அமைக்கும் போது, சாதாரணமாக வெடிப்பு வரும். அதை தண்ணீர் தெளித்து, மட்டக்கோல் வைத்து அடித்தால் போதும். கான்கிரீட் போட்ட ஒன்று அல்லது இரண்டு மணி நேர இடைவெளியில், துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து விட்டால் சரியாகிவிடும்.
நான் புதிதாக வீடு கட்டி ஓராண்டு ஆகிறது. முதல் தளம் கட்டுவதற்கென கம்பிகளை நீட்டி விட்டுள்ளேன். அது துருப்பிடிக்க தொடங்கி விட்டதால், மெட்டல் ஆக்சைடு அடிக்கலாம் என பெயின்டர் கூறுகிறார். மெட்டல் ஆக்சைடு அடித்தால் கம்பியில் கான்கிரீட் ஒட்டுமா?
- வேலுமணி, காந்தி மாநகர்
கட்டாயம் மெட்டல் ஆக்சைட் அடிக்க கூடாது. ஜன்னல் கம்பிகளுக்கும், இரும்பு கதவுகளுக்கும் மட்டும் தான் மெட்டல் ஆக்சைடு அடித்து, பெயின்ட் அடிப்பார்கள். கான்கிரீட்டுகளுக்கு 'ஆன்டி கொரோசிங் பெயின்ட்' தான் அடிப்பார்கள் . கடற்கரைக்கு அருகில் வீடு கட்டும் போது, கம்பிகளில் இளம் பச்சை நிறத்தில் பெயின்ட் அடித்து இருப்பார்கள். அதுதான், 'ஆன்டி கொரோசிங் பெயின்ட். இவ்வாறு அடிக்கும் போது, பிடிமான வலிமை குறையாது.
கம்பியின் மேற்பரப்பில் இதை அடிக்கும் போது, துருவை தடுக்க நல்லதொரு வேதியல் பூச்சாக இருக்கும். கான்கிரீட் போடும் முன், இதை நன்றாக தேய்த்து எடுத்து விட்டு போட்டால், வலிமை நன்றாக இருக்கும். வேறு எந்த பெயின்டும் அடிக்கக்கூடாது.
நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில், மர ஜன்னல்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்தலாம் என நினைக்கிறோம். அவ்வாறு பயன்படுத்தினால், அது மர ஜன்னல் போல் வருமா?
- சரவணன், குறிச்சி.
கண்டிப்பாக பயன்படுத்தலாம். இன்றைய காலகட்டத்துக்கு இது தேவைதான். யு.பி.வி.சி., ஜன்னல்களில் வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல், மரம் போன்ற கிரேயின்ஸ்களிலும், மர வண்ணங்களிலும் கிடைக்கிறது.
அதனை நாம் பொருத்தும் போது, பார்ப்பதற்கு மர ஜன்னல்கள் போல் தான் தெரியும். இந்த வேலையும் சுலபம், செலவும் குறைவு. இந்த வகை யு.பி.வி.சி., ஜன்னல்கள், அனைத்து கால மாற்றத்துக்கும் ஏற்றார் போல் தான் இருக்கும்.
எங்கள் வீடு கட்டி, பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது ஆங்காங்கே கரையான் பிடிக்க துவங்கியிருக்கிறது. எப்படி சரி செய்வது?
- கீர்த்தி, காளம்பாளையம்
இதற்கு கரையான் மருந்தை தெளிப்பதால் மட்டும் சரி செய்ய முடியாது. இதற்கு உள் மற்றும் வெளிப்புற சுவற்றில், 150 மில்லி மீட்டருக்கு ஒரு துளையிட்டு, அதனுள் கரையான் மருந்தை செலுத்த வேண்டும்.
இந்த மருந்து, கொடிய விஷம் என்பதால் அதற்கான பயிற்சி பெற்றவர்களை கொண்டு செலுத்துவது நல்லது. பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு, அதை சரியான அளவில் கலந்து துளையினுள் செலுத்த வேண்டும். இந்த மருந்தை, ஐந்தாண்டுக்கு ஒரு முறை செலுத்துவது நல்லது.
உலர் சாம்பல் கல் கொண்டு, வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கட்டுனர் கற்களை தண்ணீரில் ஊற வைக்காமல், கற்களின் மீது தண்ணீரை தெளித்து, கட்டுமானத்துக்கு பயன்படுத்துகிறார். நாங்கள் கேட்டால், இந்த வகை கற்களை ஊற வைக்க தேவையில்லை; ஈரப்படுத்தினால் போதும் என்கிறார். இது சரியான முறையா?
- விஷ்ணு, பி.என்.புதூர்.
ஆம். இது சரியான முறைதான். நம் செங்கற்களைப் போல், உலர் சாம்பல் கற்கள் தண்ணீர் அதிகம் உறிஞ்சாது. இந்த வகை கற்கள், மூன்று சதவீத தண்ணீரை மட்டுமே உறிஞ்சக்கூடியது .
அதனால் கலவை ஒட்டுவதற்காக மட்டும், தண்ணீரை தெளித்து ஈரப்படுத்தினால் போதும். அதனால் தான் உலர் சாம்பல் கற்களை கட்டும்போது, தண்ணீர் மீதியாகிறது.