/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டா, சிட்டா என்றால் என்ன? வாங்க... தெரிந்து கொள்வோம்!
/
பட்டா, சிட்டா என்றால் என்ன? வாங்க... தெரிந்து கொள்வோம்!
பட்டா, சிட்டா என்றால் என்ன? வாங்க... தெரிந்து கொள்வோம்!
பட்டா, சிட்டா என்றால் என்ன? வாங்க... தெரிந்து கொள்வோம்!
ADDED : டிச 22, 2023 11:48 PM

பத்திரப்பதிவுத்துறையால் பதிவு செய்யப்படும், பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்படும் சொற்களுக்கு விளக்கம் அளிக்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) செயற்குழு உறுப்பினர் பொறியாளர் ரவி.
கிராம நத்தம் - ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி.
கிராம தானம் - கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலம்.
தேவதானம் - கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலம் தானமாக அளிக்கப்படுவது.
இனாம்தாரர் - பொது நோக்கத்துக்காக, தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம் - நிலத்தின் பரப்பளவு மற்றும் எல்லைகளை குறிப்பது.
பட்டா - சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வருவாய்த்துறை சான்றிதழ்.
சிட்டா - குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் கொண்ட வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல் - குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, பயன்பாடு, கிராமம் அல்லது சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள மொத்த நிலப்பரப்பில், அந்த நிலம் எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்கள் அடங்கிய வருவாய்த்துறை சான்று.
நன்செய்நிலம் - அதிக பாசன வசதி கொண்ட நிலம்.
புன்செய்நிலம்- பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை- ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை, குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
கிரயம் - நிலம் அல்லது வீட்டை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்தும் சொல்.
புல எண் - நில அளவை எண்.
இறங்குரிமை- வாரிசுரிமை.
வில்லங்க சான்று - குறிப்பிட்ட ஒரு வீடு, மனையின் மீது ஒருவருக்கு உள்ள உரிமை மற்றும் அந்த சொத்து சம்பந்தமாக, அவர் மேற்கொண்ட வெவ்வேறு நடவடிக்கைகள் உள்ளிட்ட சகல விதமான விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
தாய்ப்பத்திரம் - ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும், முந்தைய பரிவர்த்தனை ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல் - குறிப்பிட்ட ஒரு பொறுப்பை நிறைவேற்ற அளிக்கப்படும் உறுதி.
அனுபவ பாத்தியம் -குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியை, நீண்ட காலம் பயன்படுத்தி வந்ததன் அடிப்படையில் பெறப்படும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு - நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி-வருவாய் தீர்வாயம்.