/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது மேயர் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்த பின்னணி என்ன? கலெக்டருக்கு அறிவுறுத்தல் வழங்கியது ஆணையம்
/
புது மேயர் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்த பின்னணி என்ன? கலெக்டருக்கு அறிவுறுத்தல் வழங்கியது ஆணையம்
புது மேயர் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்த பின்னணி என்ன? கலெக்டருக்கு அறிவுறுத்தல் வழங்கியது ஆணையம்
புது மேயர் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்த பின்னணி என்ன? கலெக்டருக்கு அறிவுறுத்தல் வழங்கியது ஆணையம்
ADDED : ஜூலை 25, 2024 11:22 PM

கோவை : கோவை மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்ந்தெடுக்க, மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு, கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. இதற்கு பின்னணியில் நடந்த விவகாரங்கள், கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
கோவை மாநகராட்சியில் மாதம் ஒரு முறை, மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடத்தப்படும். பொது நிதியில் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் நிலைக்குழுக்கள் பரிந்துரைக்கும் தீர்மானங்கள் மற்றும் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானிய நிதி செலவழித்தல், சிறப்பு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றி, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேயர் ராஜினாமா
இதன்படி, கடைசியாக, மார்ச் மாதம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நன்னடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், ஏப்., மற்றும் மே மாதங்களில் கூட்டம் நடத்தவில்லை; ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்த கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இச்சூழலில், 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, மேயர் பதவியை ராஜினாமா செய்ததால், மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை. தேர்தல் சமயத்தில், மேயர் மற்றும் கமிஷனரால் முன்அனுமதி வழங்கப்பட்டு, ஏராளமான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மாமன்றத்தில் பின்னேற்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இதையடுத்து, துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று (26ம் தேதி) மாமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது; 327 தீர்மானங்கள் விவாதத்துக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில், 109 தீர்மானங்கள் மட்டும், சில நாட்களுக்கு முன், கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டன. மற்ற தீர்மானங்கள் நேற்று அனுப்பப்பட்டன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் அனுப்பியது கவுன்சிலர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், கூடுதலாக அனுப்பிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது; ஒத்திவைத்து கூட்டத்தை நிறைவு செய்ய வேண்டுமென, கவுன்சிலர்கள் பேசிக் கொண்டனர்.
முறைகேடு
இச்சூழலில், 'கூடுதல் தீர்மானங்களை படித்துப் பார்க்க போதிய அவகாசம் இல்லை; அவசர கோலத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினால் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதால், அவற்றை ஒத்திவைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன், மாநகராட்சியில் கடிதம் கொடுத்தார். இது, மாநகராட்சி நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அடுத்த கட்டமாக, 'இட ஒதுக்கீடு சட்டத்தின் படி, கோவை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அப்பதவி காலியாக இருக்கும் இத்தருணத்தில், துணை மேயர் தலைமையில் மாமன்றம் கூடுவது சிறப்பாக இருக்காது; பெண்மைக்கு பெருமை சேர்க்கும் வகையில், விரைந்து புதிய மேயர் தேர்ந்தெடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கடிதம் வழங்கினர்.
இதையடுத்து, காலியாக உள்ள மேயர் பதவியை நிரப்ப, மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அறிவுரைகளை, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஆக., 6ல் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு, மேயர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை மேயர் தலைமையில் இன்று (26ம் தேதி) மாமன்ற கூட்டம் நடைபெறும் சூழலில், மேயரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை அதிரடியாக நேற்று மாலை அரசு அறிவித்ததால், கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.