/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் தொல்லை அதிகரிப்புக்கு காரணம் என்ன? அரசு ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
/
வனவிலங்குகள் தொல்லை அதிகரிப்புக்கு காரணம் என்ன? அரசு ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
வனவிலங்குகள் தொல்லை அதிகரிப்புக்கு காரணம் என்ன? அரசு ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
வனவிலங்குகள் தொல்லை அதிகரிப்புக்கு காரணம் என்ன? அரசு ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 22, 2025 11:49 PM
மேட்டுப்பாளையம்; வனவிலங்குகள் தொல்லை அதிகரிப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என,விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் வனத்துக்கு வெளியே ஒரு கிலோமீட்டர் வரை வனவிலங்குகள் தானாக வந்து போவதற்கு அனுமதிக்க வேண்டும். அதிலிருந்து மூன்று கிலோ மீட்டர் வரை வந்துவிட்ட வனவிலங்குகளை, பிடித்து காட்டுக்கு அனுப்ப வேண்டும். 4 கி.மீட்டர் வெளியே வந்துவிட்ட பன்றிகளை மட்டும், வனத்துறை சுட்டுக் கொல்லும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது ஏற்புடையது அல்ல எனவும், ஏமாற்றத்தை அளிக்கிறது எனவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பவானி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வனவிலங்குகள் மோதலை தடுப்பதற்கு, விவசாயிகளை பாதுகாப்பதற்கு என நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதை தெரிவிக்காமல், வனவிலங்குகள் தாக்கி இறந்தால், 10 லட்சம் ரூபாய் என்பது எந்த வகையிலும் பயனில்லாதது.
வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த, 20 ஆண்டுகளாக வனவிலங்கு தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை, அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
வனப் பகுதியில் இருந்த பன்றிகள் இரவில் விவசாய பயிர்களை சேதம் செய்து வருகின்றன. இந்த காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது, விவசாயிகளின் அழுத்தமான கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு அரசு அறிவித்தது. வனத்துறை எந்த காட்டுப்பன்றியையும் சுட்டுக் கொன்றதாக தெரியவில்லை. விவசாயிகளும், பொதுமக்களும் ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகளை கொல்வதற்கு அனுமதிப்பதுதான், நடைமுறை சாத்தியமானதாகும். சரியான தீர்வாகவும் இருக்க முடியும்.
எனவே வனவிலங்கு மனித மோதல், விவசாய அழிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்தது, ஏற்புடையது அல்ல, ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே வனவிலங்குகள் வெளியே வராமல் தடுக்க, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

