/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றைச்சாளர முறை தொடர்பான ஏழு பேர் கமிட்டி என்னவானது?
/
ஒற்றைச்சாளர முறை தொடர்பான ஏழு பேர் கமிட்டி என்னவானது?
ஒற்றைச்சாளர முறை தொடர்பான ஏழு பேர் கமிட்டி என்னவானது?
ஒற்றைச்சாளர முறை தொடர்பான ஏழு பேர் கமிட்டி என்னவானது?
ADDED : மே 11, 2025 12:15 AM
கோவை: அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு நடப்பாண்டில், ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசின் அறிவிப்புகள் கானல் நீராக போனது.
தமிழகத்தில், 171 அரசு கல்லுாரிகள், 162 அரசு உதவி மற்றும் 1233 தனியார் கல்லுாரிகள் என, மொத்தம், 1636 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன.
மாநிலத்தில், பொறியியல், மருத்துவம், சட்டம், கட்டடவியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் முழுமையாக, ஒற்றைச்சாளர முறை சேர்க்கை நடைமுறையில் உள்ளது.
ஆனால், கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு, இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் உயர்கல்வித்துறை திணறிவருகிறது. தற்போது, அரசு கல்லுாரிகளுக்கு விண்ணப்பம் பெறுதல், தரவரிசை பட்டியல் வெளியீட்டுக்கு மட்டும், ஒற்றை சாளர முறை பின்பற்றப்படுகிறது.
அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடந்தாண்டே ஒற்றைச்சாளர முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு, ஏழு பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
இக்குழு ஆய்வுகளை முடித்து, கடந்த ஆண்டே அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. ஆனால், தற்போது வரை இந்த அறிக்கையின் நிலைப்பாடு குறித்து, எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
பல்கலை ஆசிரியர் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறியதாவது:
அரசு பொறியியல், அரசு உதவி பெறும் பொறியியல், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு ஆன்லைன் சேர்க்கையை, சில தினங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சர் துவக்கிவைத்தார். ஆனால், நடப்பாண்டிலும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகள் விடுபட்டுள்ளன.
அரசிடம் ஏழு பேர் குழு சமர்ப்பித்த அறிக்கை குறித்து, தற்போது வரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஒற்றைச்சாளர முறையை செயல்படுத்தும் பட்சத்தில், மாணவர்கள் மதிப்பெண்களின் தரத்திற்கு ஏற்ற, கல்லுாரிகளில் படிக்க முடியும்.
தவிர, ஒவ்வொரு கல்லுாரிகளுக்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவை தடுக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, இதனை தாமதம் இன்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து, உயர்கல்வித்துறை அமைச்சருக்கு, கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.