UPDATED : டிச 29, 2025 05:58 AM
ADDED : டிச 29, 2025 05:57 AM

வடவள்ளி: மேற்கு மண்டல தலைவரின் 36வது வார்டு, நியூ தில்லை நகரில் 14 வீதிகள் உள்ளன. இப்பகுதியில் தற்போது இரவோடு இரவாக தார் ரோடு போடப்படுகிறது.
பழைய ரோட்டை பெயர்த்தெடுக்காமல், ரோட்டுக்கு மேல் ரோடு போடுகின்றனர். அரை மணி நேரத்துக்குள் ஒரு வீதியில் முடித்து விடுகின்றனர். அப்படியானால் ரோட்டின் தரம் எப்படியிருக்கும்?
பாதாள சாக்கடை குழாய் மேனுவல், ரோட்டுக்குள் மறைந்து விட்டது. 30 எம்.எம்., தடிமனுக்கு ஒரே ஒரு லேயர் மட்டுமே தார் கலவை பரப்பப்படுகிறது. போர்வை போர்த்துவது போல் ரோடு போடப்பட்டிருக்கிறது.
வீட்டில் இருந்து இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது, டயர்களில் தார் கலவை ஒட்டிக் கொண்டு பெயர்ந்து வருகிறது. வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். கன மழை பெய்தால் ரோடு பெயர்ந்து சென்று விடும் அளவுக்கு மோசமாக உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது, 'மெயின் ரோட்டில் இரண்டு லேயர், குறுக்கு வீதிகளில் ஒரு லேயர் மட்டுமே போடுவோம். ரோட்டின் தரத்தை மூன்றாவது ஏஜன்சி மூலம் ஆய்வு செய்வோம். தரமின்றி போட்டிருந்தால் பில் தொகை தர மாட்டோம்' என்றனர்.
ரோட்டின் தரத்தை கண்காணிக்க வேண்டியது உதவி பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோரின் கடமை. கண்காணிக்காததால், ஒப்பந்ததாரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ரோடு போடுகின்றனர்.

