/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை உரத்தால் என்ன மாயம் நடக்கும்? ஆய்வு செய்யும் வேளாண் பல்கலை
/
இயற்கை உரத்தால் என்ன மாயம் நடக்கும்? ஆய்வு செய்யும் வேளாண் பல்கலை
இயற்கை உரத்தால் என்ன மாயம் நடக்கும்? ஆய்வு செய்யும் வேளாண் பல்கலை
இயற்கை உரத்தால் என்ன மாயம் நடக்கும்? ஆய்வு செய்யும் வேளாண் பல்கலை
ADDED : மே 10, 2025 01:08 AM

கோவை : இயற்கை உரத்தால் என்ன மாயம் நிகழ்ந்து விடும் என்பதற்கு, கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் அரை நூற்றாண்டு கால தொடர் ஆய்வு பதிலளித்திருக்கிறது. இயற்கை உரம் அற்புதத்தை நிகழ்த்தும் என்ற பதில்தான் அது.
விவசாயத்தில், மண்ணின் வளம்தான் முதல் அடிப்படை. மண்ணில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்ற அளவு இருக்கிறது. குறைவான சத்து, மிதமான அளவு, மிகை அளவு என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில், எந்த சத்து குறைவாக இருந்தாலும் ஒருங்கிணைந்த உர மேலாண்மையால் அதிகரிக்க முடியும்.
ஆனால், அங்கக கரிமம் (ஆர்கானிக் கார்பன்) எனப்படும் மக்கு சத்தை அதிகரிக்க முடியாது. இதையும் இயற்கை உரம் சாதித்திருக்கிறது. அதேசமயம் இந்த மாயம் நிகழ, பல ஆண்டுகள் ஆகும். இதுதொடர்பாக, வேளாண் பல்கலை மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வி கூறியதாவது: மக்கு என அழைக்கப்படும் அங்கக கரிமமானது, மண் வளத்தை மேம்படுத்துகிறது. நுண்ணுயிர்கள் வாயிலாக, மக்கிய அங்கக கழிவுகள் மண்ணுக்கு ஊட்டச்சத்தை அளித்து, பயிர்களுக்கு உதவுகிறது. மண்ணின் இயற்பியல், வேதியியல் பண்புகளை வலுப்படுத்துகிறது. மண்ணின் பி.ஹெச்., அளவை சமன் செய்கிறது.
'மக்கு' மண்ணில், 0.5 சதவீதத்துக்கு கீழ் இருந்தால் பற்றாக்குறை எனவும், 0.5 முதல் 0.75 சதவீதம் வரை இருந்தால் மிதமானது எனவும், அதற்கும் அதிகமாக இருப்பின் அதிகம், உபரி எனவும் வகைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் தவிர, மற்ற அனைத்து நிலங்களும் மக்கு பற்றாக்குறை கொண்டவையாக இருக்கின்றன.
பரிசோதனைத் திடல்
வேளாண் பல்கலையில், கடந்த 1972ம் ஆண்டு முதல் நீண்ட கால உர பரிசோதனைத் திடல் செயல்பாட்டில் இருக்கிறது. இத்திடலில், ரசயான உரங்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படுகிறது. அதேசமயம், ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 10 டன் அங்கக உரம் தவறாமல் தொடர்ந்து இடப்பட்டு வருகிறது.
1972ல் எடுக்கப்பட்ட மண் மாதிரி பரிசோதனையில், மக்கு 0.32 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து அங்கக உரத்தைப்பயன்படுத்தியதால், இதன் அளவு 0.74 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. 'மக்கு' எனப்படும் அங்கக கரிமத்தின் அளவை, வேறு எந்த வகையிலும் அதிகரிக்கவே முடியாது. இயற்கை உரம் நீண்ட கால அடிப்படையில் மாயம் செய்துள்ளது.
பயிர்க்கழிவுகள் எக்காரணம் கொண்டும், வயலை விட்டு வெளியில் செல்லக்கூடாது. மக்கு போதுமான அளவில் இருந்தால், அத்தனை ஊட்டச்சத்துகளையும், பயிர் எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் மாற்றிக் கொடுக்கும். எனவே, விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட அளவில், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்வதுடன், தொடர்ந்து இயற்கை உரத்தைப் பயன்படுத்தி வந்தால், மண் வளத்தை அதிகரிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.