/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
பேஸ்மட்டம் அளவில் ஏற்படும் நீர் கசிவு தடுக்க என்ன செய்ய வேண்டும்?
/
பேஸ்மட்டம் அளவில் ஏற்படும் நீர் கசிவு தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பேஸ்மட்டம் அளவில் ஏற்படும் நீர் கசிவு தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பேஸ்மட்டம் அளவில் ஏற்படும் நீர் கசிவு தடுக்க என்ன செய்ய வேண்டும்?
UPDATED : டிச 20, 2025 05:29 AM
ADDED : டிச 20, 2025 05:28 AM

க ட்டடங்களில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக, பேஸ்மட்டம் அளவில் ஏற்படும் நீர் கசிவும், பெயின்ட் உரிதலும் உள்ளது.
இதற்கான தீர்வு குறித்து, கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்க உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியதாவது:
ஒரு கட்டுமானத்தின் வலிமையை தீர்மானிப்பது, அதன் பேஸ்மட்டம் என்ற அடித்தளம் தான். சுவரில் ஏற்படும் நீர் கசிவுக்கு, பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது 'கேப்பில்லரி ரைஸ்' என்பது.
அதாவது, நமது கட்டுமானத்திற்கு பக்கத்தில் உள்ள நிலம் காலியாக இருந்து, தண்ணீர் தேங்கி நின்றாலோ அல்லது கிணறு, குளம், ஒடை போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் இருந்தாலோ, நீர் கசிவு பிரச்னை ஏற்படும்.
அந்த ஈரம், மண் வழியாக ஊடுருவி நமது கட்டடத்தின் சுவரில், நீர் கசிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். வீட்டின் உள் புறமாகவும், வெளிப்புறமாகவும் 'புளோரின் டைல்ஸ் எபாக்ஸி' வைக்காமல் பதித்தாலும், அதன் வழியாக சுவரில் நீர் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சுவற்றிக்கு நாம் செய்த 'கியூரிங்' சரிவர காயாமல், 'பட்டி' பார்த்தாலோ அல்லது பெயின்ட் அடித்தாலோ, அதன் வாயிலாகவும் 'பெயின்ட்' உரிந்து வருவதற்கு வாய்ப்புள்ளது.
இப்பிரச்னைகள் வராமல் இருக்க, கட்டடம் கட்டும் போது பேஸ்மட்ட உயரத்திற்கு சுவர் எழுப்பிய பிறகு, அதன் மேல் டி.பி.சி., எனும் 'டேம்ப் புரூப் கோர்ஸ்' 1:1.5:3 என்ற விகிதத்தில், கான்கிரீட்டில் கலந்து போட வேண்டும்.
பின்பு அஸ்திவாரத்தில் இருந்து, பேஸ்மட்ட உயரம் வரைக்கும் உள்ள கட்டடத்தில் உள்புறமாகவும், வெளிப்புறமாகவும் 'பிட்டுமென் கோட்' இரண்டு அடுக்காக அடிக்க வேண்டும். ஒரு முறை கிடைமட்டமாகவும், மற்றொரு முறை செங்குத்தாகவும் அடிக்க வேண்டும்.
பிட்டுமென் கோட்டை, செங்கல் சுவற்றில் அடிப்பதன் வாயிலாக அதன் பின்பு செய்யக்கூடிய பூச்சில் விரிசல் ஏற்பட்டாலும், நாம் நீர் கசிவில் இருந்து பாதுகாக்க முடியும். பின்பு பூச்சு பூசும் போது 'வாட்டர் புரூப் கெமிக்கல்' உபயோகித்து பூசுவது சிறப்பு.
வீட்டின் உள்புறமாகவும், வெளிப்புறமாகவும் புளோரிங் டைல்ஸ் பதிக்கும்போது, 'ஸ்பேசர்' வைத்து எபாக்ஸி நிரப்பப்பட வேண்டும். கட்டடம் கட்டும் போது, சுவற்றில் செய்யும் கியூரிங் நன்கு காய்ந்த பிறகு, 'பட்டி' பார்ப்பதோ அல்லது பெயின்ட் அடிப்பதோ நல்லது.
இவ்வாறு, அவர் கூறினார்.

