/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
பெயின்ட் விற்பனையிலும் ரெடிமிக்ஸ் ரகங்கள் வந்தாச்சு!
/
பெயின்ட் விற்பனையிலும் ரெடிமிக்ஸ் ரகங்கள் வந்தாச்சு!
பெயின்ட் விற்பனையிலும் ரெடிமிக்ஸ் ரகங்கள் வந்தாச்சு!
பெயின்ட் விற்பனையிலும் ரெடிமிக்ஸ் ரகங்கள் வந்தாச்சு!
ADDED : டிச 20, 2025 07:28 AM

கட்டுமான பணியில் சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பதில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், தனித்தனியாக கிடைக்கும் பொருட்களை வாங்கி, பணியாளர்கள் ஒன்று சேர்த்து தேவையான வண்ணங்களை பெறுவது நடைமுறையில் இருந்தது.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆலைகளில் இருந்து தனித்தனியாக பெயின்ட் பொருட்கள் வந்தாலும், அவை விற்பனையகத்தில் உள்ளீடு பொருட்கள் கலக்கப்பட்டு வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. இதில், தேவையான வண்ணத்தை தேர்வு செய்து சொன்னால் போதும், விற்பனையாளர்கள் அதற்கான பேஸ் பெயின்டில் வண்ணத்தை சேர்த்து கலவையாக்கி உரிய டப்பாக்களில் அடைத்து கொடுப்பர்.
இதை வாங்கி வந்து பயன்படுத்தும் நிலையில், தண்ணீர் சேர்க்கப்படும். இந்த நடைமுறையில், தண்ணீர் சேர்க்கும் நிலையில் கூட தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கு மாற்றாக சில நிறுவனங்கள் ரெடிமிக்ஸ் கான்கிரீட் போன்று, ரெடிமிக்ஸ் பெயின்ட் ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பிரபலமான சர்வதேச ரகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் இது போன்ற பெயின்ட்களை அறிமுகப் படுத்தி உள்ளன.
பெயின்ட் தொடர்பான அடிப்படை கூட தெரியாத மக்கள் எந்த இடத்துக்கு என்பதையும், என்ன வண்ணம் என்பதையும் மட்டும் தெரிவித்தால் போதும், தேவையான அளவுகளில் பெயின்ட்கள் வழங்கப்படும்.
இதை வாங்கி, உரிமையாளரே நேரடியாக, பெயின்ட் அடிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். எமல்ஷன் மற்றும் எனாமல் ரக பெயின்ட்கள் இப்படி ரெடிமிக்ஸ் நிலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இது போன்ற இறக்குமதி ரகங்களை பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், இவ்வகை பெயின்ட்கள் நம் நாட்டு சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதா என்பதை மட்டும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், இறக்குமதி ரகம் என்ற பெயரில் சில போலி நிறுவனங்களின் தரமற்ற பெயின்ட்களும் சந்தைக்குள் நுழைந்து விடுகின்றன.
எனவே, வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும்போது, அவசர சூழலில் இருப்பவர்கள் இது போன்ற ரெடிமிக்ஸ் பெயின்ட்களை வாங்கி பயன்படுத்தலாம் என்கின்றனர், இத்துறை வல்லுனர்கள்.

