ADDED : ஆக 16, 2025 09:11 PM

உ லகளவில் ஏற்படும் மரணங்களில், ஆறில் ஒன்று புற்றுநோய் காரணமாக ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் வரும் என்பதால், வரும் முன் காப்போம் என்பதே சிறந்ததாக இருக்கும்.
இது குறித்து, கோவை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வராஜ் உடன் ஒரு கலந்துரையாடல்...
புற்றுநோய் என்பது என்ன, ஏன் ஏற்படுகிறது ?
இயல்பாகவே நம் உடம்பில், மூன்று முதல் ஐந்து நாட்களில் பழைய செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். இதற்காக செல்கள் இரண்டாக பிரியும். புதிதாக உருவாகும் செல்கள் ஒரு நிலையில் கட்டுப்படுத்தப்படும்.
அவ்வாறு இல்லாமல், செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பல்கி பெருகுவது புற்றுநோய் செல்களாக மாறுகிறது. எளிதாக பரவும் தன்மை, அதன் மரபணுவில் உள்ளதால் விரைவாக பிற உறுப்புகளையும் பாதிக்கிறது.
சமீபகாலமாக இப்பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன?
மரபணு காரணமாகவும், வாழ்வியல் முறை, உண்ணும் உணவு, சுற்றுப்புறச்சூழல், புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை முக்கிய காரணிகள். வாய், தொண்டை புற்றுநோய், நுரையீரல், மலக்குடல், பெருங்குடல், மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் இதனால் அதிகரித்து வருகின்றன.
இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...என்ன செய்யக்கூடாது?
மக்களிடம் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு வேண்டும். அதிக மேற்கத்திய உணவுகளை எடுப்பதால், ஒரு நாளில் வெளியேற வேண்டிய மலம், குடலில் இரண்டு நாட்கள் தேங்கி பின்னர் வெளியேறுகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் தினமும் காலையில், மலம் கழிப்பதாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை, அது இரண்டு நாட்களுக்கு முன் வெளியேற வேண்டியது என்று.
குடலில் அதிக நேரம் மலம் தங்குவதால் ஏற்படும் நச்சு பொருட்கள், புற்றுநோயை உருவாக்கிவிடுகிறது. இதுபோன்று ஒவ்வொன்றும், நம் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டவையே.
முதலில் இந்நோய் குறித்து, தயக்கமின்றி பேச வேண்டும். மலக்குடல், மார்பகம், கர்ப்பப்பை வாய் என பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, அச்சத்தை விட ஒரு வித தயக்கம் அதிகமாக இருப்பதை காண முடிகறது.
பிற நோய்களை காட்டிலும், புற்றுநோயினால் அதிக இறப்புகள் ஏற்பட காரணம் என்ன ?
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவை, மூன்று ஆண்டுகளுக்கு பின் வருமா என்பதை, இப்போதே கண்டுபிடிக்க முடியும். தடுப்பூசி செலுத்தி, வராமல் செய்யலாம். ஆரம்பநிலையில் கண்டறிந்தால், 100 சதவீதம் குணப்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஆனால், பலர் இறுதிநிலையில் பரிசோதனைக்கு வருவதே, இறப்புக்கு காரணம்.
அதுவும், புற்றுநோய் என உறுதிசெய்து விட்டால், உடனடியாக சிகிச்சையை தாமதிக்காமல் துவங்க வேண்டும். ஆனால், நான்கு டாக்டர்களை கேட்டு உறுதி செய்து ஒன்று, இரண்டு மாதங்கள் தாமதமாக பலர் வருகின்றனர். அதற்குள் புற்றுநோய் செல்கள் பரவிவிடுகின்றன.
இந்நோய் பாதிக்கப்பட்ட வர்கள், உறவினர்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலில் அச்சம் தவிர்த்து, தைரியமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் மிகவும் அவசியம். குறிப்பாக, இணையதளங்களில் புற்றுநோய் குறித்து தேடி பயந்து விடுகின்றனர். ஒவ்வொரு புற்றுநோய்க்கும், அதன் தன்மை, பாதிக்கப்பட்டவரின் செல்களின் தன்மை என, அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கும்.
மருத்துவரை அணுகி எதுவானாலும் கேட்கலாம். இணையதளத்தில் பார்த்து பயந்தே பலர் தன்னம்பிக்கையை இழந்துவிடுகின்றனர். இதில், பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக மீண்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது?
குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த புற்றுநோய் அதிகம் இருக்கும். குழந்தைகளில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால், 10- 18 வயதுக்குள் நாம் என்ன கொடுக்கிறோம், வாழ்வியல் முறை அறிமுகப்படுத்துகிறோம் என்ற அடிப்படையில், 30 வயதில் வர வாய்ப்புகள் அதிகம். முன்பெல்லாம் 50, 60 வயதுக்கு மேல் வந்த புற்றுநோய், தற்போது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என மாறிவிட்டது.
புற்றுநோய் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம் என்பதால், வரும் முன் காப்போம் என்பதே சிறந்தது. பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க செலுத்தும் கவனத்தை, நோய் அற்ற ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுப்பதிலும் பெற்றோர் செலுத்த வேண்டும்.
10- 18 வயதுக்குள் நாம் என்ன கொடுக்கிறோம், வாழ்வியல் முறை அறிமுகப்படுத்துகிறோம் என்ற அடிப்படையில், 30 வயதில் வர வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவை, மூன்று ஆண்டுகளுக்கு பின் வருமா என்பதை, இப்போதே கண்டுபிடிக்க முடியும். தடுப்பூசி செலுத்தி, வராமல் செய்யலாம்.