பயனில்லாத குடியிருப்புகள் பயன்படுத்துவது எப்போது?
பயனில்லாத குடியிருப்புகள் பயன்படுத்துவது எப்போது?
ADDED : மார் 24, 2026 10:11 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறை குடியிருப்புகள், பயன் படுத்த முடியாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டி கொடுத்தால், வனத்துறையினருக்கு குடியிருக்க வீடுகள் கிடைக்கும்.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை குடியிருப்புகள் உள்ளன. மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், இந்த குடியிருப்புகளில் குடியிருந்து வந்தனர். தற்போது ஐந்துக்கு மேற்பட்ட வீடுகள், இடிந்து விழும் நிலையில் உள்ளன. பயன் படுத்தாமல் பல ஆண்டுகளாக இருந்ததால், வீட்டு கூரையின் மேல் பகுதியில் மரங்கள், செடிகள் வளர்ந்துள்ளன. சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய வனத்துறை பணியாளர்கள், போதிய வனத்துறை குடியிருப்புகள் இல்லாததால், வெளியே வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை, அதிகாரிகள் இடித்து விட்டு, புதிய வீடுகளை கட்டி கொடுத்தால், வாடகை வீடுகளில் குடியிருக்கும் பணியாளர்களுக்கு, மிகவும் வசதியாக இருக்கும். எனவே புதிய வீடுகள் கட்ட, மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
