/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டி முடித்த கடைகள் திறப்பது எப்போது?
/
கட்டி முடித்த கடைகள் திறப்பது எப்போது?
ADDED : நவ 25, 2025 05:49 AM

மேட்டுப்பாளையம்: கடைகள் கட்டி முடித்து, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
மேட்டுப்பாளையம் அண்ணாச்சி ராவ் சாலையில், அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், காய்கறிகளை கொண்டு வந்து, மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அதே வளாகத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.29 கோடி ரூபாய் செலவில், மேல் கூரையுடன் கூடிய, 34 கடைகளை கட்டியுள்ளனர். இக்கடைகள் கட்டி ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையில், சாலையில் காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த காய்கறிகளை வாங்க வருகின்ற மக்கள், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே புதிதாக கட்டியுள்ள கடைகளை விரைவில் திறக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், கடைகள் ஏலம் விடுவது குறித்து தீர்மானம் வைத்து, அதை நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். தற்போது வாக்காளர் திருத்தம் தொடர்பான பணிகள், நகர்மன்ற கூடத்தில் நடைபெறுகின்றன.
அதனால் மன்ற கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. விரைவில் மன்ற கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, கடைகள் ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

