ஒப்பந்த கூலி பிரச்னைக்கு எப்போது தீர்வு? விசைத்தறி சங்கத்தினர் கேள்வி
ஒப்பந்த கூலி பிரச்னைக்கு எப்போது தீர்வு? விசைத்தறி சங்கத்தினர் கேள்வி
ADDED : மே 30, 2026 03:31 AM
சோமனுார்: ஒப்பந்த கூலி குறைப்பு பிரச்னைக்கு தீர்வு காண, விசைத்தறி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நுால் பெற்று, பல ரகங்களில் காடா துணிகளை உற்பத்தி செய்து தருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, விலைவாசிக்கு ஏற்ப, அரசு அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஒப்பந்தத்தின் படி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி வழங்காமல் குறைத்து வழங்கி வருகின்றனர். இதனால் நெருக்கடிக்கு உள்ளாகும் விசைத்தறியாளர்கள், தொழிலை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். கடந்தாண்டு போடப்பட்ட ஒப்பந்தக்கூலி உயர்வையும் தற்போது வழங்க மறுத்து வருகின்றனர்.
கூலி உயர்வு ஒப்பந்தம் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. அதனால் தான், கூலி உயர்வு ஒப்பந்தத்துக்கு சட்ட பாதுகாப்பு கேட்டு வருகிறோம். கூலியை குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
