ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் திறப்பு எப்போது? விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் திறப்பு எப்போது? விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
UPDATED : ஏப் 28, 2026 03:56 PM
ADDED : ஏப் 28, 2026 03:42 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டுமானப்பணிகள் முடிந்து நிலையில், இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சியில், கோர்ட்கள் அனைத்தும், ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. ஆட்சியில், கடந்த 2016ல், கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றன.
இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், ஒருங்கிணைந்த கோர்ட் வளாக கட்டடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக, 14 கோடியே, 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோர்ட் வளாகத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் கோர்ட் வளாகம் திறக்கப்படாமல் உள்ளது.
கட்டடம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளதால், போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடியில் கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதனால் வக்கீல்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விரைவில் கோர்ட் வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
