/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்க்கெட் கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
/
மார்க்கெட் கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : ஆக 08, 2025 07:21 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட் கட்டடப்பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், தற்போது, 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி வருகின்றனர்.
பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட்டில், காய்கறிகள், வாழை இலை, தேங்காய் கடைகள் உள்ளிட்ட, 100 கடைகள் உள்ளன. பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், மக்களும் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.48 கோடி ரூபாயில், தேர்நிலையம் மார்க்கெட்டில், 56 கடைகள் புதியதாக கட்டப்பட்டன. கடைகள் கட்டப்பட்டும் இன்னும் பயன்பாட்டுக்கு விடப்படாமல் உள்ளது.தேர்நிலையம் மார்க்கெட்டில் வியாபாரம் செய்த வியாபாரிகள் பலர் வாடகை கடைகளிலும், தெப்பக்குளம் பள்ளி வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
தேர்நிலையம் மார்க்கெட் கடைகள் இன்னும் பயன்பாட்டுக்கு விடப்படாததால், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். பயன்பாடு இல்லாத மார்க்கெட் பகுதி தற்போது வாகன நிறுத்த பகுதியாக மாறியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தேர்நிலையம் மார்க்கெட் பணிகள் நிறைவடைந்தும், பயன்பாட்டுக்கு விடப்படாமல் உள்ளது. இதனால், பலரும் தங்களது வாகனங்களை 'பார்க்கிங்' செய்து செல்கின்றனர்.இதனால், கடைகளின் தரைதளம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, வாகனங்களை நிறுத்தமால் இருக்கவும்,தேர்நிலையம் மார்க்கெட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேர்நிலையம் மார்க்கெட் கடைகள் விரைவில் திறக்கப்படும். ஏற்கனவே கடை நடத்தியவர்களிடம், கடை வேண்டி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி கடைகள் ஏலம் விடப்படும்,' என்றனர்.