ADDED : ஜன 10, 2026 07:23 AM
- நமது நிருபர் -:
பொங்கலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு படையெடுக்கும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாள் முன்பாக, நவ. மாத இரண்டாவது வாரம் துவங்கியது. வழக்கம் போல், துவங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்த நிலையில், முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இணைகின்றனர்.
தற்போது, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அதிக எண்ணிக்கையில், பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில், காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 150க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவித்த தெற்கு ரயில்வே, அவை எந்தெந்த ஊரில் இருந்து எங்கு செல்கிறது என்ற விரிவான, அதிகாரபூர்வ கூடுதல் விபரங்களை அறிவிக்காமல் உள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்து, பொங்கலுக்கு ரயிலில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு பலர் காத்திருக்கின்றனர்.
