/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொத்தல்' சாலைகளை சீரமைப்பது எப்போது? பொங்கி எழும் பொதுமக்கள்
/
'பொத்தல்' சாலைகளை சீரமைப்பது எப்போது? பொங்கி எழும் பொதுமக்கள்
'பொத்தல்' சாலைகளை சீரமைப்பது எப்போது? பொங்கி எழும் பொதுமக்கள்
'பொத்தல்' சாலைகளை சீரமைப்பது எப்போது? பொங்கி எழும் பொதுமக்கள்
ADDED : ஆக 31, 2025 07:36 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட சேதமடைந்த கிராமப்புற சாலைகள் சீரமைக்கப்படாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பல சாலைகள், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் சீரமைப்பு செய்யாமல் உள்ளது.
அதிகளவு சேதம் அடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
* தாமரைக்குளம், வீரப்பன் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் சாலை அதிகம் சேதம் அடைந்துள்ளதால், இவ்வழியாக செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
இந்த சாலையை பல ஆண்டுகளாக சீரமைக்க வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
* கோதவாடி பிரிவில் இருந்து தனியார் கம்பெனி வழியாக, நல்லட்டிபாளையம் செல்லும் சாலையில், நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள் பைக்கில் பயணம் செய்கின்றனர். இந்த சாலை முழுதும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போது சிரமம் ஏற்பட்டாலும், வேறு வழி இன்றி இச்சாலையில் பயணிக்கின்றனர்.
* கிணத்துக்கடவு மயானத்தில் இருந்து இம்மிடிபாளையம் செல்லும் சாலை, ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் பயணித்தால், வாகன பழுதாவதாலும், மழைக்காலத்தில் சகதியாக இருப்பதால் அவதிப்படுகின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் இவ்வழியாக பயணிப்பதை தவிர்த்து, மாற்றுப்பாதையில் செல்கின்றனர்.
* சொக்கனூர் அருகே உள்ள சங்கராயபுரம் பிரிவு முதல், கல்லுக்குழி வரையான தார் சாலை, 12 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன்பின் பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் கவனிப்பாரற்று கிடக்கிறது.
தற்போது இந்த சாலை உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது வரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதுமட்டுமின்றி, இந்த சாலையில் தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால், லாரிகள் அடிக்கடி லோடு ஏற்றி செல்லும் போது, எதிரில் பைக் வந்தாலும் ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.