தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு எப்போது! கூலி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு எப்போது! கூலி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு எப்போது! கூலி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி


ADDED : ஜன 16, 2025 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி மொழி திட்டத்தில், 15 தினங்களுக்கு ஒரு முறை கட்டாயம் கூலி வழங்க வேண்டும் என விதி இருந்தும், இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கூலி வழங்கும் நடைமுறையே இன்னும் நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கூலித் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதிமொழி திட்டத்தில் பணியாற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் கூலி வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்படுவதால், அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழகத்தில் முதல் கட்டமாக, 2006 முதல் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும், ஊரகப் பகுதிகளில், திறன் சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, 18 வயதுக்கு மேற்பட்டோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட தரமான மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மேலும், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் வேலை வாய்ப்பு பெற தகுதி உடையவர்.இத்திட்டத்தில் ஆண், பெண் இரு நபர்களுக்கும், சம அளவிலான அதாவது, 319 ரூபாய் ஊதியம் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேலையின் போது விபத்து ஏற்பட்டு முழுமையாக கை, கால் இழந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டாலும், 25 ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும். தேசிய மின்னணு நிதி மேலாண்மை முறை வாயிலாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஊதியம் நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, அசோகபுரம், குருடம்பாளையம், பிளிச்சி, நாயக்கன்பாளையம், ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பணியாற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சரியான கால இடைவெளியில் கூலித்தொகை வழங்கப்படாததால், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது குறித்து, 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள் கூறுகையில், இத்திட்டத்தில், 15 நாட்களுக்குள் ஊதிய தொகை வழங்குதல் உறுதி செய்யப்பட வேண்டும் என விதி இருந்தும், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொகை வழங்கப்படுகிறது. கூலித்தொகையை மத்திய அரசு நிர்ணயம் செய்த விதிப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆறு வாரங்களாக எங்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. பொங்கல் பண்டிகையின் போது கூலி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் ஏமாற்றம்தான். பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும் என, எதிர்பார்த்தோம். அதையும் கொடுக்காமல், மாநில அரசும் ஏமாற்றிவிட்டது' என்றனர்.

கால தாமதம்

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு இத்தொகை வழங்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் கொண்டு சேர்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்கின்ற கூலி தொகை உரிய முறையில் கணக்கிட்டு, உடனுக்குடன் அனுப்பி விடுகிறோம். பணம் வழங்கப்படுவதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்' என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us