/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையை தாக்கும் நோய்களில் இருந்து எப்ப தீர்வு கிடைக்கும்! விரைவில் மருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
/
தென்னையை தாக்கும் நோய்களில் இருந்து எப்ப தீர்வு கிடைக்கும்! விரைவில் மருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
தென்னையை தாக்கும் நோய்களில் இருந்து எப்ப தீர்வு கிடைக்கும்! விரைவில் மருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
தென்னையை தாக்கும் நோய்களில் இருந்து எப்ப தீர்வு கிடைக்கும்! விரைவில் மருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 21, 2025 11:10 PM

பொள்ளாச்சி; 'தென்னையை தாக்கும் நோய்களுக்கு எப்போது தான் மருந்து கண்டுபிடித்து தீர்வு காணப்படும். இதற்கு அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும்,' என, மாவட்ட தென்னை பயிர் பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெள்ளை ஈ, கேரளா வேர்வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால், தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன. அவற்றை பாதுகாக்க முடியாமல், மரங்களை வெட்டி சாய்த்து வரும் விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், இரண்டு நாள் தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு கருத்தரங்கம், ஆனைமலையில் நேற்று துவங்கியது. தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த்தன் வரவேற்றார்.
ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி, தென்னை புனரமைப்பு திட்டம் மற்றும் மற்ற திட்டங்கள் குறித்து விளக்கினார்.
காய்ப்பு இழப்பு
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: தென்னை மரங்களை தாக்கும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், காய்ப்புத்திறன் குறைந்து வருகிறது. தென்னை மரங்களில், ஆண்டுக்கு, 300 - 320 காய்கள் கிடைத்த நிலையில் தற்போது, 100 காய்கள் தான் கிடைக்கின்றன. மேலும், மரங்கள் காய்ப்பு இழந்து உள்ளன. அதுமட்டுமின்றி காய்களின் எடை குறைந்து காணப்படுகிறது.
தற்போது தேங்காய்க்கு விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லை. விலை அதிகரிப்பதால் மக்கள் தான் பாதிக்கப்படுவர்.
விஞ்ஞானிகளே கவனியுங்க!
கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு கூட மருந்து கண்டறிந்து டாக்டர்கள், மனிதர்களை காப்பாற்றினர். அதுபோன்று, தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த எப்போது தான் மருந்து கண்டுபிடிக்கப்படும் என வேளாண் விஞ்ஞானிகள் விளக்க வேண்டும்.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான், வெள்ளை ஈயை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை போன்றவையை பயன்படுத்த முடியும். இதற்கான தீர்வு கிடைக்காததால், மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும், 10 ஆண்டுகளில் தென்னை விவசாயம் காட்சிப்பொருளாக மாறிவிடும். இதற்கு எப்போதுதான் தீர்வு என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மனசு வைக்கணும்!
விவசாயிகள் பேசுகையில், 'தென்னை மரங்களில் பரவும் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அரசு முயற்சி செய்து, ஒரே நேரத்தில் மருந்து தெளிப்பு போன்ற பணிகளை மேற்கொண்டால் உரிய பலன் கிடைக்கும்,' என்றனர்.
இதற்கு அதிகாரிகள், 'வெள்ளை ஈயை கட்டுப்படுத்த வழிமுறைகள் வழங்கப்படுகிறது. விரைவில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,' என்றனர்.
தொடர்ந்து, ஆழியாறு தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் சுதாலட்சுமி மற்றும் விஞ்ஞானிகள், தென்னை வகைகள், பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கி பேசினர். ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.