/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்போது தீரும் இந்த கொடுமை விபத்து எனும் விபரீதம்:கடுமையான நடவடிக்கை தேவை
/
எப்போது தீரும் இந்த கொடுமை விபத்து எனும் விபரீதம்:கடுமையான நடவடிக்கை தேவை
எப்போது தீரும் இந்த கொடுமை விபத்து எனும் விபரீதம்:கடுமையான நடவடிக்கை தேவை
எப்போது தீரும் இந்த கொடுமை விபத்து எனும் விபரீதம்:கடுமையான நடவடிக்கை தேவை
ADDED : பிப் 15, 2024 11:46 PM

பெ.நா.பாளையம்:கோவை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துகளால், விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாவது தொடர் சம்பவங்களாக நடந்து வருகின்றன.
சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளை தடுக்க, சாலைகளில் பொது மக்களின் பாதுகாப்பு மிக, மிக அவசியமாகிறது. ஆனாலும், பெரும்பாலான சாலை விபத்துக்கள் அஜாக்கிரதையினால் நடக்கின்றன என, தெரியவந்துள்ளது.
முக்கிய காரணிகள்
தனிமனித நடத்தை, ஓட்டுநரின் உளவியல் நிலை, பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலையின் அமைப்பு, சுற்றுப்புற சூழல் போன்றவைகளே சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணிகளாக கொள்ளப்படுகின்றன.
தமிழக அரசு, விபத்து இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நடப்பாண்டு, சாலை பாதுகாப்புக்காக, 135 கோடியே, 84 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சிக்னல் விளக்குகள், சாலை கட்டமைப்புகள் மற்றும் சாலை தடுப்பான்களை நிறுவவும் செலவிடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில், 33 போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் உள்ள, 39 வழித்தடங்கள் விபத்து ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில், விபத்துக்களை தடுக்க, சாலை குறியீடுகள், தடுப்புகள் அமைத்தல், சேதங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை மாநகரில், 15 சதவீத வாகனங்கள் அதி வேகமாக இயக்கப்படுகின்றன என்ற தகவல் சிறப்பு 'சிசிடிவி' கேமரா பதிவு வாயிலாக தெரியவந்துள்ளது. பெரியநாயக்கன்பாளையத்தில் கடந்த வாரம் நடந்த விபத்தில் தனியார் பஸ் மோதி தந்தை, மகன் இருவரும் உடல் நசுங்கி, அதே இடத்தில் உயிரிழந்தனர். இச்சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டுப்பாடு இல்லாமல், அதிக வேகத்துடன் செல்லும் வாகனங்களை, கட்டுக்குள் கொண்டுவர, போலீசார் தவறுவதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'குறிப்பாக, தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த, போலீசார் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான பயணிகளை ஏற்றினால், அபராதம் விதிக்க வேண்டும். பஸ்க்குள் வீடியோ, ஆடியோ பலத்த ஓசையுடன் இயக்கப்படுவதால், டிரைவரின் மனம், உடல் பாதிக்கிறது. பஸ்களில் ஆடியோ வீடியோவை இயக்க, நிரந்தர தடை விதிக்க வேண்டும். டிரைவர்கள் பஸ் ஓட்டும்போது மொபைல் போனில் பேச தடை விதிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களின் வங்கி கணக்கில் இருந்து, தானாக அபராதத்தை வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.' என்றனர்.