ரயிலேறி போயாச்சு! விடுமுறையில் வடமாநிலத்தவர் குறுந்தொழில் துறைக்கு பாதிப்பு
ரயிலேறி போயாச்சு! விடுமுறையில் வடமாநிலத்தவர் குறுந்தொழில் துறைக்கு பாதிப்பு
UPDATED : செப் 28, 2026 04:05 AM
ADDED : செப் 27, 2026 08:22 PM

கோவை: வட மாநில தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் 30,000க்கு மேற்பட்ட ஜாப் ஆர்டர் செய்யும் குறு நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலை பார்க்க பல மாவட்டங்களில் இருந்து, தொழிலாளர்கள் வந்த காலம் இன்று இல்லை. வேலை பார்க்கும் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்.
இவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பார்ப்பது பிரச்னை இல்லை. விடுமுறை என்றால் ஒட்டுமொத்தமாக ரயிலேறி சென்று விடுகின்றனர். இவர்களை நம்பி தொழிற்சாலை நடத்துபவர்கள், வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல காரணங்களால் சொந்த ஊருக்கு சென்ற பலர் கோவை திரும்பவில்லை என்கின்றனர் தொழில் நிறுவனத்தினர்.
அதிக கூலி, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தாலும் தொடர் விடுமுறை வந்து விட்டால் இவர்கள் ரயிலேறி விடுகின்றனர் என்கின்றனர்.
ஏற்கனவே மூலப்பொருள் விலை உயர்வு, மின் கட்டணம் போன்ற பல நெருக்கடிகளில் குறுந்தொழில் முனைவோர் தவித்து வரும் நிலையில், பணியாட்கள் பற்றாக்குறையால் புதிய ஜாப் ஆர்டர் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பம்ப் மோட்டர் உற்பத்திக்கான சீசன் இது. இதே நிலை தொடர்ந்தால் உற்பத்தி முடங்கும் அபாயமுள்ளதாக, சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (சியா) தலைவர் தேவகுமார் வருத்தப்படுகிறார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
சமீபத்தில் 600க்கு மேற்பட்ட குறு நிறுவனங்களில் உள்ள பிரச்னைகளை சர்வே எடுத்தோம். பெரும்பாலான நிறுவனத்தார் வட மாநில தொழிலாளர் பற்றாக்குறையைதான் முக்கியமாக சொல்கின்றனர்.
சாதாரண ஹெல்பருக்கு ரூ.700, வெல்டிங் உள்ளிட்ட வேலைக்கு ரூ.1,000 கொடுத்தோம். இப்போது ஹெல்பருக்கு ரூ.950, இதர வேலைக்கு ரூ.1,200 கேட்கிறார்கள்.
எங்களுக்கு ஜாப் ஆர்டர் கொடுப்பவர்கள், பழைய விலையில்தான் ஆர்டர் முடித்துத்தர கேட்கின்றனர். ஜாப் ஒர்க் செய்பவருக்கு நாங்கள் எப்படி அதிக கூலி கொடுப்பது? 30 பேர் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் இப்போது 10 பேர் தான் உள்ளனர்.
பி.எப்., இ.எஸ்.ஐ. எதையுமே சம்பளத்தில் பிடிக்கக் கூடாது என்கிறார்கள். புதிய தொழிலாளர் விதிகளை சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஊரில் இருந்து வந்த 10 பேரும் ஒரே இடத்தில், ஒரே நிறுவனத்தில்தான் வேலை பார்ப்போம் என டிமாண்ட் வைக்கிறார்கள்.
பெரிய நிறுவனங்களுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் ஐ.டி.ஐ. மாணவர்களை உடனடியாக வேலைக்கு எடுத்து விடுகிறார்கள். வட மாநில தொழிலாளிகளுக்கான ஊதியத்தை நிர்ணயித்து, ஓராண்டுக்கு மாறுதலின்றி பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்சிடமும் பேசினார் நமது நிருபர்.
அவர், முதலில் குறைந்த கூலிக்கு வந்தனர். இப்போது அதிக கூலி கொடுத்தாலும் தக்க வைக்க முடிவதில்லை. குஜராத்தில் பம்ப் மோட்டார் உற்பத்தி அதிகரித்துவிட்டது. பல வட மாநிலங்களில் புதிய தொழிற்சாலைகள் வந்துவிட்டன. வட மாநில தொழிலாளிகள் அங்கு பணிக்கு செல்கிறார்கள். முன்பு தினமும் ரயிலில் புதிய பேட்ச் வருவார்கள். இப்போது புதிதாகவும் வருவதில்லை. ஊர் சென்றவர்களும் திரும்புவதில்லை,'' என புலம்பினார்.
நம்ம ஊர் ஆட்களுக்கு என்னவானது, அவர்களை பணியமர்த்துவதில் உள்ள பிரச்னைகளை களைவதே, இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு.
