/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் குறைகளை தீர்ப்பது யாரு?
/
மக்கள் குறைகளை தீர்ப்பது யாரு?
ADDED : ஆக 17, 2025 11:28 PM

கோ வை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்ட கண் ணன் நகர், மீனாட்சி நகர், சக்தி நகர், ராமச்சந்திரா நாயுடு வீதி, காமாட்சி நகர், திப்பே கவுண்டர் வீதி, சூர்யா நகர், சின்னசாமி லே-அவுட் பகுதிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஒண்டிப்புதுார், நாயுடு சாலையின் குறுக்கே உள்ள, ரயில்வே கேட்டை (கடவு எண்:3) கடந்து சூர்யா நகர், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின், 15 ஆண்டுகால கோரிக்கை.
இச்சூழலில், காங்., கட்சியை சேர்ந்த இந்த வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கடந்தாண்டு நவ., மாதம் உயிரிழந்தார். கவுன்சிலர் இல்லாததால், அடிப்படை வசதிகளுக்காக அவதிப்படுவதாக, வார்டு மக்கள் குமுறுகின்றனர்.
'ரிவர்ஸ்' எடுக்கிறது' தேவிகா (இல்லத்தரசி) காமாட்சி நகரில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. என்றாவது ஒரு நாள் மருந்து அடிக்க வருகிறார்கள். அருகே சாக்கடை கால்வாய் ஓடுகிறது. எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும், இந்த கால்வாயை கடந்து நொய்யல் ஆற்றுக்கு செல்கிறது. ஆனால் இங்கு, 40 அடிக்கு மேல் இருந்த கால்வாய் தற்போது, 15 அடிக்கு குறைவாக சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாயை அகலப்படுத்த வேண்டும். இப்பகுதி முழுவதும் இருந்து வரும் கழிவுநீர், சீராக கால்வாய்க்கு செல்லாமல் தேங்குகிறது. வாட்டம் இல்லாததால், கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுக்கிறது. மழை காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
'தீவில் வசிக்கிறோம்' பூரணி (இல்லத்தரசி) எங்கள் வார்டில் பெரும்பாலான இடங்களில், ரோடு வசதி இல்லை. காமாட்சி நகர் எக்ஸ்டன்சன் பகுதியில் மூன்று தெருக்களிலும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எல்லோரும் வரி செலுத்துகிறோம். ஆனால், ரோடு போட்டு தர மாநகராட்சி மறுக்கிறது. கவுன்சிலர் இருந்தபோதே பணிகள் சரியாக நடக்கவில்லை; அவர் இல்லாத சமயத்தில் எப்படி நடக்கும்? மழை காலத்தில் இந்த ரோடுகளில் தண்ணீர் தேங்குவதால், தீவுத்திடலுக்குள் வாழ்வது போன்று உணர்கிறோம்; சிரமப்படுகிறோம்.
'கண்டுகொள்வதில்லை' சங்கீத பிரியா (இல்லத்தரசி ) இந்த வார்டு முழுவதும் தெரு விளக்கு, ரோடு, மழைநீர் வடிகால் என எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க வந்ததோடு சரி; அதன்பிறகு வரவே இல்லை. ரோடு இல்லாததால் மழை காலங்களில், நாங்களே பணம் கொடுத்து மண் கொட்டுகிறோம். பெண்களுக்கு 'பேக் பெயின்' வருவதற்கு குண்டும், குழியுமான ரோடுதான் காரணம். புகார் செய்தால் மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
'யாரிடம் சொல்வது?' இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம்(யு.ஜி.டி.,), மழைநீர் வடிகால், ரோடு பணிகள் மோசமான நிலையில் உள்ளன. தவிர, 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் வேறு. ரோட்டை தோண்டிப்போட்டவர்களை தாமதத்துக்கு காரணம் கேட்டால், ஒருவரை ஒருவர் கைகாட்டுகின்றனர். சூர்யா நகர் எக்ஸ்டென்சன் பகுதியில் போடப்பட்ட ரோடு, ஒன்றரை இன்ச்தான் இருக்கிறது. ரோடு போடும் சமயத்தில் பணிகள் சரியாக நடக்கிறதா என, கண்காணிக்க அதிகாரிகள் வருவதில்லை. யாரிடம் குறைகளையும், தேவைகளையும் முன்வைப்பது என்று தெரியவில்லை. -தேவேந்திரன் ஒருங்கிணைப்பாளர், சூர்யா நகர் குடியிருப்போர் நலச்சங்கம்.
காமாட்சி நகர், சூர்யா நகர் பகுதிகளில் ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. காமாட்சி நகரில் உள்ள, 15 அடி ரோடு ஒன்று, புதர்மண்டி கிடக்கிறது. ஆன்லைன் வாயிலாகவும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் இங்கு கொட்டிக்கிடக்கும் பிரச்னைகளை தெரிவித்தும், எந்த பலனும் இல்லை. குழந்தைகள் சைக்கிள் கூட ஓட்ட முடியாத அளவுக்கு ரோடுகள் உள்ளன. சின்னசாமி லே-அவுட்டில் தெரு விளக்கு எரிவதில்லை. - புஷ்பா இல்லத்தரசி
சூர்யா நகர் ரயில்வே கேட்டில், மேம்பாலம் கட்டித்தருமாறு பல கட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. கவுன்சிலர் இறந்ததால் இடைத்தேர்தல் வரும் என்றுகூறி சில இடங்களில் ரோடுகளை போட்டனர். அதன் பிறகு தேர்தல் நடக்காததால் எந்த பணிகளும் நடப்பதில்லை. பீக் நேரங்களில் ரயில்வே கேட்டை கடக்க சிரமப்படுகிறோம். எங்களுக்கு மேம்பாலம் கட்டித்தர வேண்டும். - மோகன்குமார் தனியார் நிறுவன ஊழியர்
ராமச்சந்திரா நாயுடு வீதியில், 40 அடி இருந்த ரோடு ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது, 10 அடிக்கும் குறைவாகவே குறுகிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்து இடையூறு பிரச்னை தீர்ந்துவிடும். பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. ஆனால், தொடர் இணைப்பின்றி கட்டப்படுவதால், மழை காலத்தில் பாதிப்புகள் அதிகரிக்கும். தேர்தல் சமயத்தில் தக்க பதிலடி தருவோம். - கனகராஜ் தொழிலாளி
'56வது வார்டுக்கு
ரூ.4 கோடி ஒதுக்கீடு'
மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமியிடம் கேட்டபோது, ''மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளிலே அதிகபட்ச நிதியாக ரூ.4 கோடி இந்த, 56வது வார்டுக்கு ஒதுக்கப்பட்டு, ரோடு, பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கவுன்சிலர் இல்லாததால் அங்கிருந்து வருபவர்களின் குறைகள், தேவைகள் கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.