/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கு? பலம் வாய்ந்த அணிகள் இடையே பலப்பரீட்சை
/
'தினமலர்' பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கு? பலம் வாய்ந்த அணிகள் இடையே பலப்பரீட்சை
'தினமலர்' பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கு? பலம் வாய்ந்த அணிகள் இடையே பலப்பரீட்சை
'தினமலர்' பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கு? பலம் வாய்ந்த அணிகள் இடையே பலப்பரீட்சை
ADDED : மே 01, 2025 11:54 PM

'தினமலர்' பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி, கோவையில் இன்று நடக்கிறது. பலம் வாய்ந்த அணிகளான கே.ஏ.டி., டர்ப் அணியும், கோவை பிரதர்ஸ் அணியும் மோதுகின்றன. எந்த அணி கோப்பையை தட்டிச் செல்லுமோ என்கிற எதிர்பார்ப்பு, வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
'தினமலர்' நாளிதழ் சார்பில் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்', 'ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ்', 'ஓ.கே., ஸ்வீட்ஸ்' பங்களிப்புடன், 11 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கான 'தினமலர்' பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, ஏப்., 28ல் துவங்கியது. டென்னிஸ் பந்து கொண்டு, 'நாக் அவுட்' முறையிலான இப்போட்டியில், மாவட்டத்தைச் சேர்ந்த, 32 அணிகள் பங்கேற்றன.
அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி, சரவணம்பட்டி சங்கரா கல்லுாரி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானங்களில் முதல் சுற்று போட்டிகள் நடந்தன.
காலிறுதியை அடுத்து சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதியில், கே.ஏ.டி., டர்ப் அணி, நோ-11 அணி மோதின. டாஸ் வென்ற கே.ஏ.டி., டர்ப் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. 'பேட்டிங்' செய்த நோ-11 அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 65 ரன் எடுத்தது.
அணி வீரர் அபிசேக் அதிகபட்சமாக, 13 ரன் எடுத்தார். 66 ரன் இலக்குடன் களம் இறங்கிய கே.ஏ.டி., டர்ப் அணியினர், 6.2 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு, 66 ரன் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதில், 22 ரன் எடுத்த தர்மலிங்கத்துக்கு, சி.ஐ.டி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார். அதேபோல், கே. ஏ.டி., வீரர்கள் நித்தீஸ், ரோசன், ஹரிபிரகாஷ் ஆகியோர் தலா இரு விக்கெட் வீழ்த்தினர்.
இரண்டாவது அரையிறுதியில், வூல்ப் பேக் அணி, கோவை பிரதர்ஸ் அணி மோதின. 'டாஸ்' வென்ற வூல்ப் பேக் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. 'பேட்டிங்' செய்த கோவை பிரதர்ஸ் அணியினர், 10 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 105 ரன் எடுத்தனர்.
துவக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர்கள் அதிக சிக்சர் விளாசினர். அதாவது, 7 மற்றும், 8வது ஓவர்களில் தலா மூன்று சிக்சர் விளாசியது, ரன் குவிப்புக்கு வழிவகுத்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் கோபிநாத் அதிகபட்சமாக, 53 ரன் எடுத்தார்.
அடுத்து விளையாடிய வூல்ப் பேக் அணியினர், 10 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 49 ரன் மட்டுமே எடுத்தனர். இந்த அணியினர் துவக்கம் முதலே தடுமாறி, விக்கெட்களை இழந்தனர். 15 ரன்களுடன், 4 விக்கெட் வீழ்த்திய கோவை பிரதர்ஸ் வீரர் சுதீந்திரனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டி இன்று நடக்கிறது; கே.ஏ.டி., டர்ப் அணியும், கோவை பிரதர்ஸ் அணியும் மோதுகின்றன. அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த, வூல்ப் பேக் அணிக்கும், நோ-11 அணிக்கும் இடையே மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டிகள் நடக்கின்றன.