/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13 இணைப்பு சாலைகள் இருக்கும்போது புறவழிச்சாலை எதற்கு? நிலம் ஆர்ஜிதம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
/
13 இணைப்பு சாலைகள் இருக்கும்போது புறவழிச்சாலை எதற்கு? நிலம் ஆர்ஜிதம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
13 இணைப்பு சாலைகள் இருக்கும்போது புறவழிச்சாலை எதற்கு? நிலம் ஆர்ஜிதம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
13 இணைப்பு சாலைகள் இருக்கும்போது புறவழிச்சாலை எதற்கு? நிலம் ஆர்ஜிதம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஆக 31, 2025 11:04 PM

பல்லடம், சூலூர், அன்னூர் தாலுகாவில் உள்ள கிராமங்கள் வழியாக, 81 கி.மீ., தூரத்துக்கு, கிழக்கு புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்ட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்படும் விவசாயிகள் இணைந்து, கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை துவக்கினர். இந்த நிலையில் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கிட்டாம்பாளையத்தில் நேற்று நடந்தது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், ஏர்முனை இளைஞரணி மாநில செயலாளர் சுரேஷ், சத்தியமூர்த்தி, சந்திரசேகர், பழனிசாமி உள்ளிட்ட பலர் பேசினர். இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பேசியதாவது: வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்தி கிழக்கு புறவழிச்சாலை அமைத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உயர்மின் கோபுரம், பைப் லைன் பதிப்பு திட்டத்தால் ஏற்கனவே நிலங்களை இழந்துள்ளோம். அந்த பிரச்னைக்கும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
இதனால் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் இருந்து வருவோர், திருச்சி ரோட்டில் காரணம் பேட்டை, கருமத்தம்பட்டி, அன்னூர் வழியாக தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு செல்கின்றனர். இதில் போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்படவில்லை. அவிநாசி ரோட்டில் வருவோர், அவிநாசி, அன்னூர் வழியாக நீலகிரி மாவட்டம் செல்கின்றனர்.
கோவை நகருக்குள் செல்லாமல், சத்தி ரோடு உள்ளிட்ட வடக்கு பகுதிகளுக்கு செல்ல, ஏற்கனவே, 13 இணைப்பு ரோடுகள் உள்ள நிலையில், தற்போது, 14-வதாக, ஆயிரம் கோடி செலவில் புதிதாக, கிழக்கு புறவழிச்சாலை எதற்கு அமைக்கவேண்டும்.
இத்திட்டத்தால் எந்த பலனும் இருக்காது. அதனால், புது திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே இருக்கும் ரோடுகளை மேம்படுத்த வேண்டும். விளை நிலங்களை அழிக்காமல் மாற்று வழியை செயல்படுத்த வேண்டும்.கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால், பல போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.

