/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகர்ப்புற உள்ளாட்சி புதிய விதிகளில் ஏன் இந்த 'கடுமை' பதவி உயர்வு பெற முடியாமல் 9,000 பேர் தவிப்பு
/
நகர்ப்புற உள்ளாட்சி புதிய விதிகளில் ஏன் இந்த 'கடுமை' பதவி உயர்வு பெற முடியாமல் 9,000 பேர் தவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி புதிய விதிகளில் ஏன் இந்த 'கடுமை' பதவி உயர்வு பெற முடியாமல் 9,000 பேர் தவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி புதிய விதிகளில் ஏன் இந்த 'கடுமை' பதவி உயர்வு பெற முடியாமல் 9,000 பேர் தவிப்பு
ADDED : ஆக 10, 2025 10:47 PM
கோவை, ; தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள், 2023ல் இருக்கும் கடுமையான விதிகளால் மாநகராட்சிகளில் பணிபுரியும், 9,000 அமைச்சுப்பணியாளர்கள் பதவி உயர்வு பெறமுடியாமல் தவிப்பதாக, குமுறல்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய விதிகள் கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., 13ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி விதிகளில் திருத்தம் செய்யுமாறு மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை சேர்ந்த சப் கலெக்டர்களை, மாநகராட்சிகளில் உதவி கமிஷனர்களாக விதிகளுக்கு முரணாக நியமனம் செய்வதாக புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாரும் அனுப்பியுள்ளனர்.
அதற்கு, 'உதவி கமிஷனர் பணிகளில் பதவி உயர்வு வாயிலாக நியமனம் செய்ய தகுதியான பணியாளர் தற்போது இல்லை. பல்வேறு பணிகளுக்காக மாநகராட்சிகளில் உதவி கமிஷனர் பணியிடம் அத்தியாவசியம் ஆகிறது' என்று, நகராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
விதிகளில் தளர்வு தேவை தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:
அமைச்சு பணியாளர்கள் பதவி உயர்வுக்கு, 1996 மாநகராட்சி விதிகளின்படி சில பதவிகளுக்கு மட்டும் இரண்டு, மூன்றாண்டு என அனுபவம் கேட்கப்பட்டது. ஆனால், 2023 புதிய விதிகளின்படி ஐந்தாண்டுகள் வரை கேட்கப்பட்டுள்ளது.
பழைய விதிகளின்படி ஒரு தேர்வுதான் நடத்தப்பட்டது. தற்போது இளநிலை உதவியாளராக இருந்து உதவியாளராக பதவி உயர்வுபெற, பகுதி-1, பகுதி-2 என இரு தேர்வு நடக்கிறது. புதிய விதிகளை அமல்படுத்த ஆறு மாதம், ஆறு மாதம் என, இரு முறை அவகாசம் வழங்கப்பட்டது.
பதவி உயர்வுக்கு காத்திருப்பு அந்த காலகட்டத்தில், 10 சதவீதம் பேர் பதவி உயர்வு பெற்றனர். அதாவது, 25 மாநகராட்சிகளில் பணிபுரியும், 10 ஆயிரம் பணியாளர்களில், 1,000 பேர் கடந்த, 2024 மார்ச், 15க்குள் பதவி உயர்வு பெற்றனர். அதன்பிறகு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.
கோவையில், 2,000 பேர் உட்பட தமிழகத்தில், 9,000 பேர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். தற்போது, பதவி உயர்வு கோரினால் தகுதி இல்லை என்கின்றனர்.
புதிய விதிகளின்படி பதவி உயர்வு கிடைக்காத நிலையில், தகுதி எப்படி கிடைக்கும்.
எங்களுக்கு நெருக்கடி தரும் வகையில், இந்த விதிமுறைகள் உள்ளன. புதிய விதிகளில் சிரமம் இருக்கும் பட்சத்தில், விதிகள் அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், அந்த சிரமங்களை நீக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களது சிரமங்களை நீக்கி அரசு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.