/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடுவது ஏன்?
/
கோவை குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடுவது ஏன்?
கோவை குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடுவது ஏன்?
கோவை குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடுவது ஏன்?
ADDED : நவ 08, 2025 01:01 AM

தொண்டாமுத்தூர்: கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, வாரத்தில், திங்கள் கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு, தினசரி, ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்கள் மற்றும் கோடை காலங்களில், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இதன் மூலம் வனத்துறைக்கு சராசரியாக, மாதந்தோறும், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. போளுவாம்பட்டி சூழல் சுற்றுலா மூலம், சுமார், 40 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 100 மலைவாழ் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். மழைக்காலங்களில், தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அந்த குடும்பங்களுக்கும், வனத்துறைக்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 2.86 கோடி ரூபாய் மதிப்பில், ஜிப் லைன் சாகச விளையாட்டு, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு மூலம் நடந்து செல்லும் வசதி, சேதமடைந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி, புதிய கழிப்பறை, பொருட்கள் பாதுகாப்பு அறை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்த, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
8 மாதங்களாகியும், அனுப்பப்பட்ட திட்டமதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்னும், மூன்று மாதங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதற்குள், இத்திட்டத்திற் கு ஒப்பு தல் அளித்து, பணிகளை விரைந்து முடித்தால் தான், கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை, வழக்கத்தைவிட அதிகரிக்க முடியும். இதன் மூலம் வனத்துறைக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, இதனை நம்பியுள்ள, நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.
ஆனால், இத்திட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளும், அரசும் முனைப்பு காட்டாமல், கிடப்பில் போட்டுள்ளதால், கோவை குற்றாலத்தின் வளர்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, அதிகாரிகளும், அரசும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

