/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளத்தில் வீடுகள் இடிந்து விழுந்தது ஏன்? 4,000 வீடுகள் புதிதாக கட்டுவதற்கு அறிக்கை தாக்கல்
/
சங்கனுார் பள்ளத்தில் வீடுகள் இடிந்து விழுந்தது ஏன்? 4,000 வீடுகள் புதிதாக கட்டுவதற்கு அறிக்கை தாக்கல்
சங்கனுார் பள்ளத்தில் வீடுகள் இடிந்து விழுந்தது ஏன்? 4,000 வீடுகள் புதிதாக கட்டுவதற்கு அறிக்கை தாக்கல்
சங்கனுார் பள்ளத்தில் வீடுகள் இடிந்து விழுந்தது ஏன்? 4,000 வீடுகள் புதிதாக கட்டுவதற்கு அறிக்கை தாக்கல்
ADDED : ஜன 22, 2025 12:37 AM

கோவை; கோவை, சங்கனுார் பள்ளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கான்கிரீட் வீடு மற்றும் இரண்டு ஓட்டு வீடுகள் பெயர்ந்து விழுந்தது, அப்பகுதியில் வசிப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களுக்கு மாற்று வீடு வழங்க, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் மழை நீர் சங்கனுார் பள்ளம் என்றழைக்கப்படும் ஓடை வழியாக, சிங்காநல்லுார் குளத்தை சென்றடைகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக, சங்கனுார் ஓடையில் தண்ணீர் செல்லாததால், ஆபத்து அறியாமல், கரையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
கடந்தாண்டு கன மழை பெய்தபோது, ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; ஒரு வீட்டின் பின்புறச் சுவர் இடிந்து விழுந்தது. அப்போதே, அப்பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சங்கனுார் பள்ளத்தின் இரு கரையிலும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டது. கவுண்டம்பாளையம் எருக்கம்பெனியில் இருந்து, சங்கனுார் பள்ளத்தின் இரு கரையிலும் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினால், மாற்று வீடு ஒதுக்க வேண்டும். தற்சமயம் அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், குடியிருப்போரை இடப்பெயர்ச்சி செய்யாத வகையில், தடுப்புச்சுவர் கட்டும் பகுதியில் இருந்து, நான்கு அல்லது ஐந்து மீட்டர் அகலத்துக்கு, சாலை வசதி ஏற்படுத்தும் வகையில், வீடுகளின் பின்புறப் பகுதியை மட்டும் இடிக்க திட்டமிடப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, வீடுகளின் சுவர்கள் இடிக்கப்பட்டு வந்தன.
இதன்படி, 68வது வார்டு ஹட்கோ காலனி புது அண்ணா வீதியில், ஓடையில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. கரையில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளின் பின்புறப் பகுதி இடிக்கப்பட்டது.
15 அடி ஆழத்துக்கு, பொக்லைன் இயந்திரத்தால் குழி தோண்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டிருந்த, கான்கிரீட் வீடு ஒன்றின் பின்புறச் சுவரை இடித்தபோது, மூன்று 'பில்லர்'களை இடித்ததால், கட்டடம் ஆட்டம் கண்டது.
ஓடையின் கரைப்பகுதி என்பதால், மண் இலகுதன்மையோடு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, கான்கிரீட் வீடு மற்றும் அருகாமையில் உள்ள இரண்டு வீடுகள் பெயர்ந்து, ஓடைகளுக்குள் விழுந்தன. இது, அப்பகுதியில் வசிப்போரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கான்கிரீட் வீடு, தி.மு.க., விவசாய அணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது. வீடுகளை இழந்தவர்கள் கண்ணீர் சிந்தியபடி இருந்தது, பார்ப்போரை கலங்க வைத்தது.
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,அம்மன் அர்ஜூனன், மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானா, மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் உள்ளிட்ட அதிகாரிகள், கள ஆய்வு செய்தனர்.
வீடுகளை இழந்து தவிக்கும், மூன்று குடும்பத்தினருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று வீடு வழங்க, மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.
சங்கனுார் பள்ளத்தின் இரு புறமும், ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை தோராயமாக கணக்கெடுத்து, வேறொரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, மாநகராட்சியில் இருந்து மாவட்ட நிர்வாகத்திடம், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.