/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்? இருதய டாக்டர்கள் விரிவான விளக்கம்
/
ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்? இருதய டாக்டர்கள் விரிவான விளக்கம்
ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்? இருதய டாக்டர்கள் விரிவான விளக்கம்
ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்? இருதய டாக்டர்கள் விரிவான விளக்கம்
ADDED : அக் 06, 2024 03:25 AM
இருதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் மட்டுமல்ல, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கத்தாலும்(அனுரிசம்) மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.
கோவை அரசு மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது:
வயதாகும் போது இருதய ரத்தக்குழாய்களில் பழுது ஏற்படும். இருதயத்துக்கு வரும் ரத்தக்குழாயில்(கொரோனரி ஆர்ட்டரி) வீக்கம் என்பது புகைப்பழக்கம், உணவு பழக்கவழக்கம், மாறி வரும் வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது.
ரத்தக்குழாயின் உட்புறம் உள்ள எண்டோபீலியம், ரத்தம் உறையும் தன்மை, ரத்தக்குழாயின் தன்மை ஆகியவற்றை பராமரிக்கும் பணியை மேற்கொள்கிறது. புகைப்பழக்கத்தால் எண்டோபீலியம் சேதமடையும்.
அதனால், ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படும். அதேபோல், ரத்தக்குழாய் பழுதடைவதால், ரத்த அழுத்தம் அதிகரித்து வீக்கம் ஏற்படுகிறது. எந்த இடத்தில் வீக்கம் இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல், பிரச்னை ஏற்படும். இது எந்த வயதில் வேண்டுமானாலும்ஏற்படலாம்.
இருதயத்தில் ஏற்படும் பிரச்னையை, உடனடியாக சரிசெய்யவில்லை எனில், உயிரிழப்பு ஏற்படலாம். அரிதாக சிலருக்கு, மரபு வழியாகவும் இப்பிரச்னை ஏற்படும். இண்டிமா, மீடியா அட்வன்டீசியா என்ற மூன்று பகுதிகள், ரத்தக்குழாயை ஒருங்கிணைக்கின்றன.
இதில் கொலோஜன் என்ற பொருள் உள்ளது. அது குறையும் போது, ரத்தக்குழாய் பலவீனம் அடையும். அதனால் வீக்கம் ஏற்படும். எந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறதோ, அதில் ஸ்டென்ட் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை கே.ஜி. மருத்துவமனை இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதால், 4 - 5 மி.மீ., ல் இருந்து, 10 மி.மீ., வரை விரிவடையும். இதனால், ரத்தக்குழாயில் 'அட்வன்டீசியா' எனும் பகுதி பலவீனமடையும்.
இதன் காரணமாக, இயல்பான ரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படும். புகைபிடித்தல், தவறான உணவுப்பழக்க வழக்கம், அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை பாதிப்பு உள்ளிட்டவற்றால் இப்பிரச்னை ஏற்படுகிறது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றினால் தவிர்க்கலாம்,'' என்றார்.