/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய நான் எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்? வெகுண்டெழுந்தார் விவசாயி; அரண்டு போயினர் அதிகாரிகள்

ADDED : மே 20, 2025 06:51 AM
கோவை : கோவை மாவட்டம், அன்னுார் தாலுகா, வடவள்ளி ஊராட்சியை சேர்ந்தவர் சதாசிவம்; விவசாயி. இவரது தாய்,மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது பெயரில் இருந்த, ஒருஏக்கர், 84 சென்ட் நிலத்தை, சதாசிவத்துக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார்.
இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உயிர் சாசனம், சொத்து ஆவணங்கள், வில்லங்கச் சான்று உள்ளிட்ட சான்றுகளை இணைத்து, பட்டா மாறுதல் கேட்டு, வடவள்ளி ஊராட்சி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், சதாசிவம்விண்ணப்பித்தார்.
ரூ.25 ஆயிரம் லஞ்சம்
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்து, சதாசிவத்தை தொடர்பு கொண்ட ஒருவர், '25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பட்டா மாறுதல் விரைந்து செய்து தரப்படும்' என கூறியிருக்கிறார். பணம் கொடுக்க மறுத்ததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
கடந்த ஏப்., மாதம் இரண்டாவது முறையாக, ஆவண நகல்களை இணைத்து மீண்டும் விண்ணப்பித்தார். வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு பலமுறை நடையாய் நடந்தார். தொலைபேசியில் அழைப்பதாக கூறியுள்ளனர்.
லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளனர். அதற்கு, 'விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். எனது பூர்வீகச் சொத்துக்கு பட்டா மாறுதல் செய்ய எதற்கு பணம் கொடுக்க வேண்டும்' என, சதாசிவம் கேட்டுள்ளார். உடனே, இரண்டாவது முறையாக விண்ணப்பித்த மனுவும், தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக அரசுக்கு கேவலம்
கோபமடைந்த விவசாயி, 'அரசு சம்பளம் தருவதில்லை என, வடவள்ளி வி.ஏ.ஓ., பிரபு வெளிப்படையாக சொல்லட்டும்; நான் பணம் தருகிறேன். திங்கட்கிழமை (19ம் தேதி) பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். இல்லையெனில், அன்னுார் தாசில்தார் அலுவலகத்தில், எனது ஆவணங்களுடன் வந்து, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
பணம் பறிக்கும் வி.ஏ.ஓ.,வை பணியில் வைத்திருப்பது, தமிழக அரசுக்கு மிகவும் கேவலம்' என, அன்னுார் தாசில்தார், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும், 16ம் தேதி (வியாழக்கிழமை) மனு அனுப்பினார்.
மனுவை படித்து பதற்றமடைந்த அன்னுார் தாசில்தார், விவசாயியை, தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தார். ஆவணங்களை சரிபார்த்த அவர், பட்டா மாறுதல் செய்வதற்கான நடவடிக்கையை எடுத்தார்.
மறுநாள் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
இதற்கு முயற்சி எடுத்த அன்னுார் தாசில்தார் யமுனா, மண்டல துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள் ஆகியோருக்கு விவசாயி நன்றிதெரிவித்தார்.