/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
/
மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ADDED : நவ 10, 2025 11:57 PM

வால்பாறை: மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிகம் உள்ளதால், இயற்கையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் உள்ள கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே வரையாடுகள், சிங்கவால்குரங்குகள் அதிக அளவில் உள்ளன. இது தவிர, யானை, காட்டுமாடு, கரடி போன்ற வன விலங்குகளும் பகல் நேரத்தில் ரோட்டில் உலா வருகின்றன.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் அதிவேகமாக வரும் சுற்றுலா வாகனங்களால், ரோட்டில் நடமாடும் வனவிலங்குகளின் உயிருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் பருவமழைக்கு பின் வனவளம் மிகவும் செழிப்பாக உள்ளது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போதுமான அளவு கிடைக்கிறது.
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில், வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், இந்தப்பகுதியில் சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்.
வரையாடு மற்றும் சிங்கவால் குரங்குகளை துன்புறுத்துவது, 'செல்பி' மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.

