/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகள் நகரில் உலா; மக்கள் அச்சம்
/
காட்டுப்பன்றிகள் நகரில் உலா; மக்கள் அச்சம்
ADDED : மே 29, 2025 11:55 PM
கோவை; கோவை மாநகராட்சி 41வது வார்டு பகுதியில், காட்டுப்பன்றி, குட்டிகளோடு உலா வருவதால், அச்சமடைந்த பொதுமக்கள், வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.
பி.என்.புதூர் மும்மநாயக்கர் வீதி விரிவாக்க பகுதிகளில், கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் அடிக்கடி உலா வருகின்றன. நேற்று முன்தினம் மாலை, 4 குட்டிகளுடன் ஒரு காட்டுப்பன்றி அப்பகுதியில் சுற்றித்திரிந்தது.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ''இப்பகுதியில், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் கடந்த சில மாதங்களாகவே உள்ளது. வனத்துறைக்கு தெரிவித்தால் அவர்களும் வந்து பார்க்கின்றனர். புதன்கிழமை மாலை 4 குட்டிகளுடன் ஒரு காட்டுப்பன்றி சுற்றித் திரிந்தது.
ஒரு வீட்டு வளாகத்துக்குள் நுழைந்தது. கதவை மூடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் ஓடி விட்டது. மக்கள் நடமாட்டம் குறிப்பாக குழந்தைகள் விளையாடும் இடத்தில், காட்டுப்பன்றிகள் நடமாடுவதால், அச்சமாக உள்ளது. வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
வனத்துறையினரிடம் கேட்டபோது, ''அப்பகுதிக்கு வன ஊழியர்கள் சென்று ஆய்வு செய்தனர். உள்ளூர் குழுமம் அங்கு ஆய்வு செய்து, வனப்பகுதியில் இருந்து எவ்வளவு தூரம், எவ்விதமான நடவடிக்கை தேவை என்பதைப் பரிந்துரை செய்வர். அதைத்தொடர்ந்து, அவற்றைப் பிடிப்பதா, துரத்துவதா என முடிவு செய்யப்படும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்க அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.