/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு சேற்றில் சிக்கிய காட்டு யானை மீட்பு பலவீனம் போக்க சாடிவயல் யானைகள் முகாமில் சிகிச்சை
/
கழிவு சேற்றில் சிக்கிய காட்டு யானை மீட்பு பலவீனம் போக்க சாடிவயல் யானைகள் முகாமில் சிகிச்சை
கழிவு சேற்றில் சிக்கிய காட்டு யானை மீட்பு பலவீனம் போக்க சாடிவயல் யானைகள் முகாமில் சிகிச்சை
கழிவு சேற்றில் சிக்கிய காட்டு யானை மீட்பு பலவீனம் போக்க சாடிவயல் யானைகள் முகாமில் சிகிச்சை
UPDATED : ஜன 26, 2026 05:57 AM
ADDED : ஜன 26, 2026 05:56 AM

தொண்டாமுத்தூர்: சேற்றில் சிக்கிய பெண் காட்டு யானையை, வனத்துறையினர் போராடி மீட்டு, அதற்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, மதுக்கரை சுற்றியுள்ள கிராமங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, நேற்று அதிகாலை வரை, குப்பனூரில் உள்ள விவசாய நிலங்களிலேயே சுற்றித்திரிந்தது. வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். யானை வாழைத்தோட்டத்திற்குள் புகுந்தது. தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிக்கு சென்றது.
அங்கு, தண்ணீர் தொட்டி அருகே இருந்த கழிவுநீர் தேக்கும் குழிக்குள் இறங்கி சேற்றில் சிக்கியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு, காலை, 6:45 மணி முதல் ஜே.சி.பி., இயந்திரங்களின் உதவியுடன் வனத்துறையினர், சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின், காலை, 9:50 மணிக்கு மீட்டனர். ஆனால், நீண்ட நேரமாக சேற்றில் சிக்கி தவித்ததால், யானை பலவீனமாக இருந்தது. எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.
வனக்கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, காலை, 10:30 மணி முதல் மருத்துவ சிகிச்சையளிக்க துவங்கினர். தகவலறிந்த பொதுமக்கள், நூற்றுக்கணக்கில் அங்கு திரண்டனர்.
யானைக்கு சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்பட்டது. மாலை, 5:20 மணி வரை, தொடர்ந்து சிகிச்சை அளித்து, மீண்டும் ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் யானையின் உடலில் 'பெல்ட்' கட்டி, அதனை தூக்கி நிற்க வைக்க முயற்சித்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், யானைக்கு சிகிச்சை அளிக்க வசதியாகவும், யானையை, சாடிவயலில் புதியதாக திறக்கப்பட்ட யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்து சிகிச்சையை தொடர உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

