/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியை சூறையாடிய காட்டு யானைகள்
/
பள்ளியை சூறையாடிய காட்டு யானைகள்
ADDED : அக் 23, 2025 10:51 PM

வால்பாறை: அரசு பள்ளியை காட்டு யானைகள் சூறையாடியதால் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த, 21ம் தேதி இரவு, 10:30 மணிக்கு பள்ளிக்கு குட்டிகளுடன் விசிட் செய்த யானைகள், வகுப்பறைக்குள் புகுந்து கதவு, ஜன்னல், பெஞ்ச், டெஸ்க், பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது.
யானை பள்ளிக்கு வந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரியாததால், வனத்துறையினருக்கு யாரும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி வகுப்பறைகள் சேதமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்த வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, வட்டார கல்வி அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர் சத்தியவாணிமுத்து ஆகியோர், யானை தாக்கி சேதமடைந்த பள்ளி கட்டடத்தை பார்வையிட்டனர்.
இதையடுத்து, மாணவர்கள் அமர்ந்து படிக்க வசதியாக, அருகில் உள்ள எஸ்டேட் கிளப் அறை ஒதுக்கப்பட்டது. அங்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
ஆசிரியர்கள் கூறுகையில், யானைகள் தாக்கியதில், பள்ளியின் கதவு, ஜன்னல்கள் உடைந்து விட்டன. அவற்றை சரிசெய்யாமல் வகுப்பறையில் பாடம் நடத்துவது ஆபத்தானது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின், பள்ளியில் பாடம் நடத்தப்படும், என்றனர்.

