/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் காட்டுத்தீ மேலாண்மை கூட்டம்
/
கிராமங்களில் காட்டுத்தீ மேலாண்மை கூட்டம்
ADDED : பிப் 15, 2025 06:48 AM
பொள்ளாச்சி; ஆனைமலை புலிகள் காப்பகம் ஒட்டிய கிராமங்களில், காட்டுத்தீ மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனைமலை புலிகம் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டு புதர்கள் மற்றும் இலைகள் காய்ந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், ஆங்காங்கே, வெப்பத்தின் காரணமாக, காட்டுத்தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள் பாதிப்படையும். ஆங்காங்கே தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டாலும், தீயை அணைக்க போதிய நவீன உபகரணங்கள் இன்றி வனத்துறையினரும் சிரமத்துக்கு ஆளாவர். இதனால், காட்டுத்தீ பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, வனத்துறையினர், வனம் ஒட்டிய கிராமங்கள் மற்றும் செட்டில்மென்ட்களில் காட்டுத்தீ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
வனத்திற்குள் அத்துமீறி செல்வதும், வனத்தில் தீ பிடிக்கும் வகையில் நடந்து கொள்வதும், வன சட்டப்படி குற்றமாகும். வனப்பகுதியில் தீப்பிடித்தால் பொதுமக்கள் தீயை அணைக்க தங்களால் இயன்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.