/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா... அல்லது இதுவும் வெற்று அறிவிப்புதானா?
/
சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா... அல்லது இதுவும் வெற்று அறிவிப்புதானா?
சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா... அல்லது இதுவும் வெற்று அறிவிப்புதானா?
சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா... அல்லது இதுவும் வெற்று அறிவிப்புதானா?
ADDED : டிச 30, 2025 05:08 AM

கோவை: ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க மண் பரிசோதனை முடிந்து ஓராண்டை கடந்து விட்டது. இன்னும் அடுத்தகட்டத்துக்கு திட்டம் நகரவில்லை. இதுவும் வெற்று அறிவிப்பாக மாறுமா என்ற கேள்வி ரசிகர்கள், வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசு 'டெண்டர்' கோரியது.
திறந்தவெளி மைதானம் 20 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ள பகுதியை கண்டறியும் பணி நடந்தது. ஒண்டிப்புதுாரில் தற்போது திறந்தவெளி சிறை மைதானம் தேர்வு செய்யப்பட்டு, மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை, கடந்தாண்டு ஜூன் மாதம் துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஆய்வு செய்தார்.
இடமானது விளையாட்டு துறைக்கு வகை மாற்றமும் செய்யப்பட்டது. பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, சட்டசபையில் உதயநிதி அறிவித்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் மண் பரிசோதனையும் செய்யப்பட்டு, 'ஸ்டேடியம் மாடல்' இறுதி செய்யப்படது.
வீரர்கள் தங்கும் அறை, கேலரி, பயிற்சி மையம், அவசர சிகிச்சை அறை உள்ளிட்டவை அடங்கிய வரைபடம் தயாரித்து, 'ஸ்டேடியம் மாடல்' இறுதி செய்யப்பட்டவுடன் அதை கட்டமைக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்படும் என, எஸ்.டி.ஏ.டி., தரப்பில் இந்தாண்டு ஜன., மாதம் தெரிவிக்கப்பட்டது.
'டிட்கோ' அழைப்பு இந்நிலையில், கடந்த நவ.,துவக்கத்தில் கோவையில், பொது - தனியார் கூட்டு முயற்சியில், 30 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் வணிக வளாகம் அமைக்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்தது.
அதன்படி, 20.18 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம், 10 ஏக்கரில் வணிக வளாகத்தை அமைப்பதற்கு அரசு வழங்கும் நிலத்தில், தனியார் நிறுவனம் தன் செலவில் கிரிக்கெட் மைதானத்தை கட்டி பராமரிக்க வேண்டும். பின், அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறைந்தது, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் இருக்கைகளுடன் மைதானம் இடம்பெறும். அடுத்தாண்டு துவங்கவுள்ள நிலையில் அறிவிப்புடன், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என, கிரிக்கெட் வீரர்கள் புலம்புகின்றனர். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையுமா? அல்லது வெற்று அறிவிப்பாக மாறுமா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.

