/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதவாடி குளத்தின் 384 ஏக்கர் பரப்பில் நீர் நிரம்புமா? யாரும் கண்டுகொள்ளாததால் வேதனை
/
கோதவாடி குளத்தின் 384 ஏக்கர் பரப்பில் நீர் நிரம்புமா? யாரும் கண்டுகொள்ளாததால் வேதனை
கோதவாடி குளத்தின் 384 ஏக்கர் பரப்பில் நீர் நிரம்புமா? யாரும் கண்டுகொள்ளாததால் வேதனை
கோதவாடி குளத்தின் 384 ஏக்கர் பரப்பில் நீர் நிரம்புமா? யாரும் கண்டுகொள்ளாததால் வேதனை
ADDED : ஜூலை 11, 2025 11:59 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகேயுள்ள, கோதவாடி குளத்துக்கு, பி.ஏ.பி., உபரி நீர் அல்லது நொய்யல் ஆற்று நீர் கொண்டு வர சாத்தியக்கூறுகள் இருந்தும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளம் (96 வள்ளம்) 384 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது, 312.72 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குளம் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு முறை பி.ஏ.பி., உபரி நீர் வடசித்துார் பகுதியில் இருந்து, குளத்திற்கு விடப்பட்டது. இதில் முதல் முறை, 41 நாட்களில் குளத்தின் பரப்பு முழுவதும் நீர் நிரப்பப்பட்டது. இரண்டாவது முறை, 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரத்து இருந்தது. இதில், 10 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டது.
தற்போது, குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் விளைநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. இது மட்டுமின்றி பல கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் இந்த குளம் கைகொடுக்கிறது.
குளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து, பல அதிகாரிகள் மற்றும் பல முகாம்களில் மக்கள் மனு அளித்தும் இது வரை எந்த பயனும் இல்லை.
அரசிடமிருந்து, 'பி.ஏ.பி., திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டு நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வழங்குவது சாத்தியமில்லை. மேலும், குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லை,' என பல ஆண்டுகளாக பதிலை கூறி வருகின்றனர்.
தற்போது, பல தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும், அதிகாரிகள் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர் என்பது விவசாயிகளின் பகிரங்க குற்றச்சாட்டாக உள்ளது.
தற்போது பெய்துள்ள மழையால், பி.ஏ.பி., பாசன திட்டத்துக்கு உட்பட்ட ஆறுகளில் உபரிநீர் அதிகளவு செல்கிறது. அதேபோன்று, கோவை மேற்கு பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் செல்கிறது. இந்த நீர் முழுவதும் வீணாகி, கடலில் கலக்கிறது. அந்த நீரை கோதவாடி குளத்துக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதவாடி குளத்தில் இருந்து, கேரளா எல்லை வரை, 15க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளது. குளத்துக்கு நீர் வரும் பாதை ஓரம் உள்ள மன்றாம்பாளையம், மெட்டுவாவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 20 மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.
குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்தால், பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது.
பி.ஏ.பி., உபரி நீர் பச்சார்பாளையம் வழியாக பொங்கலூர் மெயின் கால்வாயில் செல்கிறது. இதில், பச்சார்பாளையத்தில் இருந்து மெட்டுவாவி வரை, 5 கி.மீ., தூரத்துக்கு கால்வாய் வெட்டினால், பி.ஏ.பி., உபரி நீரை குளத்துக்கு கொண்டு வர நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த முடியும்.
அதேபோன்று, நொய்யல் ஆற்றில் இருந்து செட்டிபாளையம் வரை, 7 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டினால், அங்கிருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரலாம்.
குளத்தின் நீர்ப்பிடிப்பில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த இரு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், பி.ஏ.பி., உபரி நீரும், நொய்யல் ஆற்று நீரும், கோதவாடி குளத்துக்கு நிரந்தரமாக கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.