/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சர் ஆய்வுக்கு பிறகாவது... மீண்டு வருமா? அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
/
அமைச்சர் ஆய்வுக்கு பிறகாவது... மீண்டு வருமா? அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
அமைச்சர் ஆய்வுக்கு பிறகாவது... மீண்டு வருமா? அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
அமைச்சர் ஆய்வுக்கு பிறகாவது... மீண்டு வருமா? அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
ADDED : ஜன 20, 2025 06:39 AM

உடுமலை: உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்காததால், இரு ஆண்டாக முடங்கியுள்ள நிலையில், சர்க்கரைத்துறை, கரும்பு பெருக்க அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். இதற்கு பிறகாவது, ஆலை இயங்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
உடுமலை அருகே, மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1960ல் துவக்கப்பட்டு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 21 ஆயிரம் விவசாயிகள் ஆலை அங்கத்தினர்களாக உள்ளனர்.
ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயக்கம், 4 லட்சம் டன் கரும்பு அரவை, இதிலிருந்து கிடைக்கும் கழிவுப்பாகு வாயிலாக இயங்கும், துணை ஆலையான எரிசாராய உற்பத்தி, என சிறப்பாக இயங்கி வந்தது.
ஆலை இயந்திரங்கள் நிறுவி, 60 ஆண்டுகள் பழமையானதால், கரும்பு பிழிதிறன் குறைவு, சர்க்கரை உற்பத்தி பாதிப்பு, அடிக்கடி இயந்திரங்கள் பழுது என பெரும் சிக்கலை சந்தித்து வந்தது.
ஆலை இயந்திரங்களை நவீனப்படுத்தி, முழுமையாக புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும், என கரும்பு விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆலையை புனரமைக்க, ரூ.80 கோடி திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதனை ஆறு ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வழிமுறை குறித்து விளக்கி, திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அரசு நிதி ஒதுக்காததால், இரு ஆண்டுகளாக சர்க்கரை ஆலை இயங்காமல் முடங்கியுள்ளது. கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பதோடு, கூட்டுறவுத்துறை ஆலை பாழடைந்து வருகிறது.
ஆலையை இயக்க விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்திய நிலையில், நேற்று அமராவதி சர்க்கரை ஆலையை, சர்க்கரை துறை, கரும்பு பெருக்க துறை அமைச்சராக உள்ள ராஜேந்திரன், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் மனு
அப்போது, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தலைவர் பாலதண்டபாணி, செயலாளர் வீரப்பன் உள்ளிட்டோர் வழங்கிய மனு: அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி, நல்ல முறையில் இயக்க வேண்டும், என பல முறை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு அளிக்கப்பட்டது.
துணை ஆலையான, எரிசாராய வடிப்பாலை வாயிலாக, எத்தனால் உற்பத்தி செய்ததால், அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் மூலப்பொருளான கழிவுப்பாகு இல்லாததால், அந்த ஆலையும் மூடப்பட்டுள்ளது.
இதனால், ஆலையை நம்பியுள்ள, 20 ஆயிரம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டாட்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் சார்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கின்றனர்.
எனவே, உடனடியாக ஆலையை நவீனப்படுத்த தேவையான நிதி ஒதுக்கவும், நடப்பு ஆண்டே ஆலை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், 'அமராவதி சர்க்கரை ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து தமிழக முதல்வரிடம் அறிக்கை வழங்கி, நவீனப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.